ஐபிஎல்லை கைவிடுங்கள்-உலகக் கோப்பையில் கவனம் செலுத்துங்கள்: வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கோலி வலியுறுத்தல்

ஐபிஎல்லை கைவிடுங்கள்-உலகக் கோப்பையில் கவனம் செலுத்துங்கள்: வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கோலி வலியுறுத்தல்

ஐபிஎல் போட்டிகளை கைவிட்டு 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மீது கவனம் செலுத்துங்கள் என இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் கோலி அறிவுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளை கைவிட்டு 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மீது கவனம் செலுத்துங்கள் என இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் கோலி அறிவுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் பேட்ஸ்மேன்கள் ஐபிஎல், உலகக் கோப்பை இரண்டிலும் விளையாடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2019 மே 30 முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. 12-ஆவது ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29-இல் தொடங்கி மே 19-இல் முடிந்தவுடன் 10 நாள்களில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. இதனால் உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது உள்பட சிலர் ஐபிஎல் போட்டிகளை தவிர்க்க வேண்டும்.
 உலகக் கோப்பை போட்டிக்கு அவர்கள் அனைவரும் முழு உடல்தகுதி, ஆட்டத்திறனுடன் இருக்க வேண்டும் என கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ சிஓஏ கிரிக்கெட் நிர்வாகக் குழுவிடமும் அவர் எடுத்துக் கூறியுள்ளார்.
 ஐபிஎல் 12 சீசன் போட்டிகளின் போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தரப்பட வேண்டும் என கோலி தெரிவித்துள்ளது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளை தவற விடும் வீரர்களுக்கு பிசிசிஐ இழப்பீடு வழங்கலாம் எனவும் ஆலோசனை தரப்பட்டுள்ளது.
 மேலும் பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் சீசன் முதல் கட்டமோ அல்லது இரண்டாவது கட்டத்தில் மட்டுமே விளையாடினால் போதும் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 சிஓஏ நிர்வாகிகள் வினோத் ராய், டையனா எடுல்ஜி ஆகியோர் கூட்டிய கூட்டத்தில் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே ரவிசாஸ்திரி, தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 கோலியின் இந்த கோரிக்கையால், மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக பாதிக்கப்படும். அந்த அணி பும்ரா, ஹார்திக் பாண்டியா ஆகியோரை இழக்க நேரிடும்.
 இப்பிரச்னை தொடர்பாக சிஓஏ, ஐபிஎல் முதன்மை இயக்க மேலாளர் ஹேமங் அமினிடம் விவாதித்தனர். இதுகுறித்து முடிவெடுப்பதற்கு முன்பு அணிகளின் நிர்வாகங்களிடம் பேச வேண்டும். குறைந்தது வரும் நவம்பர் 15-ஆம் தேதி வீரர்கள் வாங்குதல், பரிமாற்றம் செய்வதற்கு கடைசி நாளுக்கு முன்பு ஆலோசிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
 அதே நேரத்தில் கோலி, ரோஹித், ரஹானே ஆகியோர் பேட்ஸ்மேன்களுக்கும் ஓய்வு தர வேண்டும் என கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கோலி பெங்களூரு அணிக்கும், ரோஹித் மும்பை அணிக்கும், ரஹானே ராஜஸ்தான் அணிக்கும் தலைமை தாங்குகின்றனர்.
 மேலும் இங்கிலாந்து, ஆஸி. அணி கிரிக்கெட் வீரர்கள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் ஆடுவர். உலகக் கோப்பைக்கு தயாராக ஏதுவாக அவர்களது கிரிக்கெட் வாரியங்கள் மீண்டும் அவர்களை அழைத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது.
 ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு?
 கோலியின் ஆலோசனைக்கு ஐபிஎல் அணி நிர்வாகங்கள், உள்பட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
 ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் தகுதி பெறும் நிலையில், பும்ரா முழு தகுதியுடன் இருந்தால், அவருக்கு நாங்கள் ஓய்வு தர மாட்டோம் என அதன்கேப்டன் ரோஹித் கூறியுள்ளார். பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தர வேண்டும் என கோலி கேட்பதில் எந்த நியாயமும் இல்லை என மற்றொரு அதிகாரி கருத்து தெரிவித்தார்.
 கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் பயிற்சியாளர்கள், உடலியக்க நிபுணர்கள் இந்திய அணி நிர்வாகத்துடன் இணைந்து, வீரர்களின் ஆட்டசுமை குறித்து பணி செய்துவருகின்றனர். புவனேஸ்வர், பும்ரா ஆகியோர் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. உமேஷ், கலீல் அகமது, சமி ஆகியோர் ஐபிஎல் அணிகளின் நேரடி விருப்ப வீரர்கள் இல்லை என ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com