பரபரப்பான டெஸ்ட் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூஸிலாந்து!

டி20, ஒருநாள் ஆட்டம் போல பரபரப்பான முறையில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில்...
பரபரப்பான டெஸ்ட் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூஸிலாந்து!

டி20, ஒருநாள் ஆட்டம் போல பரபரப்பான முறையில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி.

அபு தாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் - நியூஸிலாந்து இடையிலான டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 153 ரன்களுக்குச் சுருண்டது. யாஷிர் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி 227 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. பாகிஸ்தானின் பாபர் அஸம் 62 ரன்கள் எடுத்தார். போல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து அணி, 249 ரன்கள் எடுத்தது. வால்டிங், நிகோல்ஸ் அரை சதங்கள் எடுத்தார்கள். ஹசன் அலி, யாசிர் ஷா ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிதான இந்த இலக்கை நன்கு எதிர்கொண்டது பாகிஸ்தான் அணி. ஒருகட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் என்கிற நிலையில் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது நியூஸிலாந்து அணி திடீரென விஸ்வரூபம் கொண்டது. அசாத் ஷபிக் 45 ரன்களில் வாக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பிறகு சரிவு ஏற்படத் தொடங்கியது. அடுத்த வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தார்கள். இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். அஸார் அலி மட்டும் மறுமுனையில் பக்குவமாக நியூஸிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டு பாகிஸ்தான் அணியின் சரிவைத் தடுக்கப் போராடினார். ஆனால் பின்கள வீரர்களான பிலால் ஆசிஃப், யாசிர் ஷா, ஹசன் அலி ஆகிய மூவரும் டக் அவுட் ஆனதால் நியூஸிலாந்தின் வெற்றியைத் தடுக்கமுடியாமல் போனது. 136 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து வெற்றிக்காகப் போராடிய அஸார் அலி கடைசியாக ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி 58.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பரபரப்பான முறையில் நடைபெற்ற டெஸ்டை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து. இந்த டெஸ்டின் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 

3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட், துபையில் நவம்பர் 24 அன்று தொடங்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com