முதல் இன்னிங்ஸிலேயே முத்திரை பதித்துள்ள பிருத்வி ஷா: புஜாராவுடன் இணைந்து விறுவிறுப்பான ஆட்டம்!

முதல் நாள் உணவு இடைவேளையின்போது 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது...
முதல் இன்னிங்ஸிலேயே முத்திரை பதித்துள்ள பிருத்வி ஷா: புஜாராவுடன் இணைந்து விறுவிறுப்பான ஆட்டம்!

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதனால் ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

முதல் ஓவரின் கடைசிப் பந்திலேயே ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடும் 18 வயது பிருத்வி ஷா அற்புதமாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்து அசத்தினார். 

இதன் மூலம் தனது முதல் டெஸ்டில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். 18 வருடம் 329 நாளில் இச்சாதனையைச் செய்துள்ளார். இதற்கு முன்பு 20 வருடம் 126 நாள்களில் அப்பாஸ் அலி பைக், இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதமடித்ததே சாதனையாக இருந்தது. 

கெமர் ரோச், ஜேஸன் ஹோல்டர் ஆகிய முக்கியப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் மேற்கிந்தியத் தீவுகள் அணி தடுமாறியது. இதை பிருத்வி ஷாவும் புஜாராவும் நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். வழக்கமாக நிதானமாக விளையாடும் புஜாராவும் இன்று தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து ஆச்சர்யப்படுத்தினார். இதனால் இந்த ஜோடி 116 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தது. இந்திய அணியும்  20 ஓவருக்குள் நூறு ரன்கள் எடுத்து ஒரு பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டுள்ளது. இதன்பிறகு 67 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் அரை சதமெடுத்தார் புஜாரா. 

இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 25 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. ஷா 75, புஜாரா 56 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com