சுல்தான் ஜோஹோர் கோப்பை: ஆஸி.,யை 5-4 என வீழ்த்தியது இந்திய ஜூனியர் ஹாக்கி

சுல்தான் ஜோஹோர் கோப்பை ஜூனியர் ஹாக்கியில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5-4 என வீழ்த்தியது. 
சுல்தான் ஜோஹோர் கோப்பை: ஆஸி.,யை 5-4 என வீழ்த்தியது இந்திய ஜூனியர் ஹாக்கி

சுல்தான் ஜோஹோர் கோப்பை ஜூனியர் ஹாக்கியில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5-4 என வீழ்த்தியது. 

மலேசியாவின் சுல்தான் நகரில் 8-ஆவது சுல்தான் ஜோஹோர் ஹாக்கி கோப்பை நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ஜூனியர் ஆடவர் அணி தனது முதல் போட்டியில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 

இதில், இந்திய அணி போட்டியின் முதல் கால்பகுதி ஆட்டத்திலேயே தனது ஆதிக்கத்தை செலுத்தியது. போட்டியின் 5-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் குர்சஹிப்ஜித் சிங் முதல் கோலை அடித்தார். அதன்பிறகு, ஹஸ்பிரீத் சிங், மன்தீப் மோர் மற்றும் விஷ்ணுகாந்த் சிங் ஆகியோர் முறையே 11, 14 மற்றும் 15 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால், முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. 

இருப்பினும், 2-ஆவது கால்பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தடுப்பாட்டத்தில் சற்று சொதப்ப ஆஸ்திரேலிய அணி எழுச்சி பெற தொடங்கியது. அதன் விளைவாக அந்த அணி 18-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்தது. இதையடுத்து, 35-ஆவது நிமிடத்தில் அந்த அணி 2-ஆவது கோல் அடித்து 2-4 என இந்திய அணியின் கோல் கணக்கை நெருங்க முயன்றது. அந்த அணியின் முதல் இரண்டு கோலையும் டேமோன் ஸ்டீபன்ஸ் என்ற வீரர் அடித்தார்.  

இந்த நிலையில், இந்திய அணியின் ஷிலாநந்த் 43-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 5-3 என வலுவான முன்னிலை பெற வைத்தார். அதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி போட்டி முடியும் வரை இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தது. அதற்கு பலனாக போட்டி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் ஒரு கோல் அடித்தது. இருப்பினும், அதன்பிறகு அந்த அணியால் கடைசி நிமிடத்தில் கோல் போட்டு சமமாக்க முடியவில்லை. இதையடுத்து, போட்டியின் முடிவில் இந்திய அணி 5-4 என த்ரில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தனது 5-ஆவது போட்டியில் இங்கிலாந்தை வரும் வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com