ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஹர்விந்தர், நாராயணுக்கு தங்கம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வில் வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்கும், 100 மீ ஓட்டத்தில் நாராயண்
வில் வித்தையில் தங்கம் வென்ற ஹர்விந்தர் சிங்.
வில் வித்தையில் தங்கம் வென்ற ஹர்விந்தர் சிங்.


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வில் வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்கும், 100 மீ ஓட்டத்தில் நாராயண் தாக்குரும் தங்கப் பதக்கம் வென்றனர். இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் தனிநபர் ரீகர்வ் வில் வித்தைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் டபிள்யூ2/எஸ்டி பிரிவு மாற்றுத்
திறனாளிகளுக்கான இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜாவ் லிக்ஸை வீழ்த்தி தங்கம் வென்றார்.
தடகளம்
தடகள போட்டிகள் பிரிவில் ஆடவருக்கான 100 மீ ஓட்டத்தில் டி35 பிரிவில் இந்தியாவின் நாராயண் தாக்குர் 14.02 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். சவூதி அரேபியாவின் அகமது அதாவி 14. 40 விநாடிகளில் வந்து வெள்ளி வென்றார்.
ஆடவருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் மோனு கங்காஸ் எஃப் 11 பிரிவில், தனது 3-ஆவது முயற்சியில் 35. 89 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அப்பிரிவில் ஈரானின் ஒலாட் மாதி 42. 37 மீ தூரம் எறிந்து ஆசிய பாரா சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.
இதேபோல், ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்தியாவின் முகமது யாசர் 14.22 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் சீனாவின் வெய் என்லாங் 15.67 மீ தூரம் எறிந்து ஆசிய பாரா சாதனையுடன் தங்கம் வென்றார். கஜகஸ்தானின் மன்சுர்பயேவ் ரவில் 14. 66 மீ தூரம் எறிந்து வெள்ளியை கைப்பற்றினார்.
ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் டி42/டி61/டி63 பிரிவில் இந்தியாவின் விஜய் குமார் 5.05 மீ நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்பிரிவில் இலங்கையின் சரிதா நிர்மலா புத்திகா 5.22 மீ தாண்டி தங்கம் தட்டிச் சென்றார். 
செஸ்
செஸ் போட்டியில் மகளிருக்கான தனி நபர் பிரிவில் இந்தியாவின் காணிக்கை இருதயராஜ் ஜெனிதா ஆன்டோ வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான அணிகள் பி1 பிரிவில் இந்தியாவின் காணிக்கை இருதயராஜ் ஜெனிதா ஆன்டோ, ராஜு பிரேமா கனிஷ்ரி இணையும், 5-பி1/பி3 பிரிவில் சக்ரவர்த்தி மேகா, கவார் திஜன் புனாராம், பாண்டே மிருனாளி பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவும் வெண்கலப் பதக்கம் வென்றன.
பளுதூக்குதல்
ஆடவருக்கான பளுதூக்குதல் போட்டியில் 80 கிலோ பிரிவில் இந்தியாவின் சுதிர் 192 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
டேபிள் டென்னிஸ்
மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸில் டிடி3-5 பிரிவில் இந்தியாவின் பவிநாபன் படேல்-சோனால்பென் படேல் இணை தனது இறுதிச்சுற்றில் 4-11, 12-14 என்ற செட்களில் 
இந்தோனேஷியாவின் அசாயுத் தரரத்-பட்டார்வடி வராரிடாம்ரோங்குல் ஜோடியிடம் தோற்று வெற்றியை கைப்பற்றியது.
ஆசிய பாராவில் அதிகபட்சம்...
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை மட்டும் இந்தியா 9 பதக்கங்கள் வென்ற நிலையில், மொத்தமாக 7 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது. இது, ஆசிய பாரா விளையாட்டு போட்டி வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும். சீனா 101 தங்கம், 49 வெள்ளி, 39 வெண்கலம் என 189 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com