பிருத்வி ஷா, ரஹானே, பந்த் அபாரம்: வலுவான நிலையில் இந்தியா

மே.இ.தீவுகளுடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்துள்ளது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

மே.இ.தீவுகளுடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதைத்தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) 2-ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 98 ரன்களுடன் களத்தில் இருந்த சேஸ் சதம் அடித்தார். அதன்பிறகு, அந்த அணி உமேஷ் யாதவ் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

இதன்மூலம், அந்த அணி 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் யாதவ் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 

பிருத்வி ஷா தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி துரிதமாக ரன் குவித்து வந்தார். மறுமுனையில் நிதானம் காட்டி வந்த ராகுல் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, பிருத்வி ஷா உடன் புஜாரா ஜோடி சேர்ந்து அவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பவுண்டரிகளாக அடித்து வந்த பிருத்வி தனது 2-ஆவது டெஸ்ட் இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாரிக்கன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, புஜாராவும் 10 ரன்களில் வெளியேறினார். 

அதன்பிறகு, சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கோலி 45 ரன்கள் எடுத்து அரைசதம் அடிப்பதற்கு முன் ஆட்டமிழந்தார்.   

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரஹானே, பந்த் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, பந்த் துரிதமாக ரன் குவித்து வந்தார். இருவரும் அரைசதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள், 2-ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுகள் விழாமல் விளையாடினர்.  

இதன்மூலம், 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணியைவிட வெறும் 3 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. ரஹானே 75 ரன்களிலும், பந்த் 85 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com