தினேஷ் கார்த்திக் இனி தேவையில்லை: தேர்வுக்குழு எடுத்த அதிரடி முடிவு!

2004-ல் தனது முதல் டெஸ்டை விளையாடிய தினேஷ் கார்த்திக், 2018 வரை 26 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ளார்...
தினேஷ் கார்த்திக் இனி தேவையில்லை: தேர்வுக்குழு எடுத்த அதிரடி முடிவு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்தும் பார்தீவ் படேலும் இடம்பெற்றுள்ளார்கள். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும் தேர்வானதில் முதல் இரு டெஸ்டுகளில் தினேஷ் கார்த்திக்கும் அடுத்த மூன்று டெஸ்டுகளில் ரிஷப் பந்தும் விளையாடினார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இனிமே தினேஷ் கார்த்திக் தேவையில்லை என்கிற முடிவை தேர்வுக்குழு எடுத்துள்ளது.

இந்திய ஏ அணி நியூஸிலாந்தில் விளையாடவுள்ளது. அதற்கான இரு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. பார்தீவ் படேலும் கேஎஸ் பரத்தும் விக்கெட் கீப்பர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதையடுத்து தினேஷ் கார்த்திக் இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வாய்ப்புண்டா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

2004-ல் தனது முதல் டெஸ்டை விளையாடிய தினேஷ் கார்த்திக், 2018 வரை 26 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் விளையாடிய இரு டெஸ்டுகளிலும் மொத்தமாகவே அவர் 21 ரன்கள் தான் எடுத்தார். இதில் இரண்டு முறை டக் அவுட் ஆனார். கடைசி 10 டெஸ்டுகளில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர், 52 தான். கடந்த 10 வருடங்களில் 10 டெஸ்டுகளில் மட்டும் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் 2010-க்குப் பிறகு இந்த வருடம்தான் மீண்டும் டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் விளையாடிய 3 டெஸ்டுகளிலும் அதிகபட்சமாக 20 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அவர் மீது அணிக்கும் தேர்வுக்குழுவுக்கும் நம்பிக்கை போய்விட்டது. அதேசமயம் 21 வயது ரிஷப் பந்த், விளையாடிய 5 டெஸ்டுகளில் ஒரு சதமும் இரு அரை சதங்களும் (இருமுறை 92 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்). இதனால் அவர் மீது நம்பிக்கை வைத்து பிரதான விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாஹா காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகும் ரிஷப் பந்த் அணியில் தொடர்ந்து இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தப் போட்டிகளினாலும் கிடைத்த குறுகிய வாய்ப்புகளையும் வீணடித்ததாலும் தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும் தினேஷ் கார்த்திக் மே.இ. மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் பேட்ஸ்மேனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த இரு தொடர்களிலும் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தேர்வாகியுள்ளார். தன்னை மீண்டும் நிரூபிக்க தினேஷ் கார்த்திக்குக்கு இந்த இரு தொடர்கள் மட்டுமே உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com