மயங்க் அகர்வாலைத் தேர்வு செய்யாத தேர்வுக்குழு மீது ஹர்பஜன் சிங் காட்டம்!

நிறைய ரன்கள் குவித்தும் அவரை இந்திய அணியில் காணமுடியவில்லை...
மயங்க் அகர்வாலைத் தேர்வு செய்யாத தேர்வுக்குழு மீது ஹர்பஜன் சிங் காட்டம்!

துபை, அபுதாபி நகரங்களில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டி, செப்டம்பர் 15-ல் தொடங்கி செப்டம்பர் 28 அன்று நிறைவுபெறுகிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஷிகர் தவன் அறிவிக்கப்பட்டுள்ளார். யோ யோ தேர்வில் தேர்ச்சி அடைந்த அம்பட்டி ராயுடு இந்திய அணியில் இந்தமுறை சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக இந்திய அணியில் சிலகாலம் இடம்பெறாமல் இருந்த கெதர் ஜாதவ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல புவனேஸ்வர் குமாரும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். கலீல் அகமத் என்கிற 20 வயது இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் இந்திய அணிக்கு மயங்க் அகர்வாலைத் தேர்வு செய்யாததை ஹர்பஜன் சிங் விமரிசனம் செய்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் பட்டியலில் மயங்க் அகர்வால் எங்கே? நிறைய ரன்கள் குவித்தும் அவரை இந்திய அணியில் காணமுடியவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு விதமான அளவுகோல் பின்பற்றப்படுகிறது என நினைக்கிறேன் என்று தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். 

கடந்த ஒரு வருடமாக கர்நாடக வீரர் மயங்க் அகர்வால் நல்ல ஃபார்மில் உள்ளார். கடந்த 9 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் நான்கு சதங்கள் அடித்துள்ளார். எனினும் அவர் இதுவரை இந்திய அணிக்குத் தேர்வாகவில்லை. இதுபற்றி இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது: கடந்த 10-12 மாதங்களில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார் மயங்க் அகர்வால். இந்திய அணிக்குத் தேர்வாக இன்னும் ஒரு படிதான் மீதமுள்ளது. விரைவில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் நன்றாக விளையாடி வருகிறார். மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கும்போது நிச்சயம் அவர் பெயரைப் பரிசீலனை செய்வோம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com