கருண் நாயரைத் தேர்வு செய்ய கோலிக்கு விருப்பம் இல்லை: விஹாரி தேர்வை முன்வைத்து கவாஸ்கர் காட்டம்!

இதைவைத்து அவரிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீ ஒரு நல்ல வீரர் இல்லை என்றா? 
கருண் நாயரைத் தேர்வு செய்ய கோலிக்கு விருப்பம் இல்லை: விஹாரி தேர்வை முன்வைத்து கவாஸ்கர் காட்டம்!

லண்டனில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இறுதி மற்றும் 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டை இழந்து 198 ரன்களை எடுத்திருந்தது. ஓய்வு பெறவுள்ள அந்த அணியின் தொடக்க வீரர் அலாஸ்டர் குக் அபாரமாக ஆடி 71 ரன்களை குவித்தார்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் விஹாரி டெஸ்ட் வீரராக அறிமுகமாகியுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் கருண் நாயர் இடம்பெற்றிருந்த நிலையில் அதற்குப் பிறகு தேர்வான விஹாரி டெஸ்ட் அணியில் இடம்பிடித்துவிட்டார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து விமரிசனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சுனில் கவாஸ்கர், தொலைக்காட்சியில் பேசியதாவது:

என்ன விளக்கமளித்தாலும் அது என்னைத் திருப்திப்படுத்தாது. எதனால் கருண் நாயர் தேர்வாகவில்லை? எனக்குத் தெரியும், அவர் உங்களுக்குப் பிடித்தமான வீரர் இல்லை என. உங்களுக்கு அவரைத் தேர்வு செய்ய விருப்பம் இல்லை. அவர் முச்சதம் அடித்தார். உடனே அவரை வெளியேற்றினீர்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சில ஆட்டங்களில் சரியாக விளையாடவில்லை. உடனே அவரை வெளியேற்றினீர். மீண்டும் அவரை அணிக்குள் கொண்டுவந்தீர்கள். தேர்வுக்குழுவினர்தான் அவரை அணிக்குள் கொண்டுவந்திருப்பார்கள். அணி நிர்வாகத்துக்கு அவர் தேவையில்லாமல் இருக்கலாம். அதனால் இந்த டெஸ்டில் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. 

எத்தனை இந்திய வீரர்கள் முச்சதம் அடித்துள்ளார்கள்? சேவாக் இருமுறையும் கருண் நாயர் ஒருமுறையும். அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கமாட்டீர்கள்? இதைவைத்து அவரிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீ ஒரு நல்ல வீரர் இல்லை என்றா? 

விஹாரிக்கு என் வாழ்த்துகள். எனினும், தான் என்ன தவறு செய்தேன் என்கிற கேள்வியை அணி நிர்வாகத்திடம் கேட்க கருண் நாயருக்கு எல்லா உரிமைகளும் உள்ளன. அவருக்கு பதில் அளிக்கப்படவேண்டும். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனைத் தேர்வுசெய்துவிட்டு, அவரை நீங்கள் அணிக்குள் தேர்வு செய்யவில்லையென்றால், அவருக்கு விளக்கம் அளிக்கப்படவேண்டும் என்று கோலியின் முடிவைக் காட்டமாக விமரிசனம் அளித்துள்ளார் கவாஸ்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com