கடைசி டெஸ்டில் சதமடித்தார் குக்; இங்கிலாந்து ரன்கள் குவிப்பு!

4-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 74 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள்
கடைசி டெஸ்டில் சதமடித்தார் குக்; இங்கிலாந்து ரன்கள் குவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் அலாஸ்டர் குக் சதமடித்துள்ளார். இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையை அடைந்துள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அறிமுக வீரர் ஹனுமா விஹாரி 56 ரன்களுடன் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 1 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 156 பந்துகளில் 86 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ஜடேஜா.

இங்கிலாந்து 40 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்தது. குக் 46, ஜோ ரூட் 29 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அந்த அணி 8 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் 154 ரன்கள் முன்னிலை பெற்றது.

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை குக்கும் ரூட்டும் தொடர்ந்தார்கள். 127 பந்துகளில் குக்கும் 81 பந்துகளில் ரூட்டும் அரை சதங்களை எட்டினார்கள். இருவரும் 171 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து வெற்றிக்கூட்டணியைத் தொடர்ந்தார்கள். மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியப் பந்துவீச்சாளர்களால் இருவருடைய விக்கெட்டையும் எடுக்கமுடியாமல் போனது. காயம் காரணமாக இஷாந்த் சர்மாவால் 8 ஓவர்களுக்கு மேல் வீசமுடியாமல் போனது. இதையடுத்து 63-வது ஓவரில் 200 ரன்களை எட்டியது இங்கிலாந்து. தன்னுடைய இரண்டாவது அரை சதத்தைச் சற்று வேகமாக எட்டிய குக், 210 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன்  சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக் (33) சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கடைசி டெஸ்டில் சதமடித்து அசத்தியுள்ளார் குக். இது அவருடைய 33-வது டெஸ்ட் சதமாகும். இதற்கு முன்பு ரெக்கி டஃப், போன்ஸ்ஃபோர்ட், கிரேக் சேப்பல்,  அசாருதீன் ஆகியோர் தங்களுடைய முதல் மற்றும் கடைசி டெஸ்டில் சதமடித்துள்ளார்கள். இந்தப் பட்டியலில் 5-வது வீரராக இணைந்துள்ளார் குக்.  2006-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார். அதே இந்தியாவுடன் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்வை முடித்துக்கொள்ளவுள்ளார். மேலும் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-ம் இடத்தையும் அவர் பிடித்துள்ளார். இதுதவிர டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இடக்கை வீரர் என்கிற பெருமையும் தற்போது குக் வசம் உள்ளது. 4-ம் நாள் மதிய உணவு இடைவேளைவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,428 ரன்கள் எடுத்துள்ளார். 

4-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 74 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. குக் 103, ரூட் 92 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.  8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி 283 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com