இங்கிலாந்து 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: ராகுல் 149, ரிஷப் பந்த் 114 அபார ஆட்டம் வீண்

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118
சதமடித்த லோகேஷ் ராகுல்-ரிஷப் பந்த்.
சதமடித்த லோகேஷ் ராகுல்-ரிஷப் பந்த்.


இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டில் லோகேஷ் ராகுல் (149), ரிஷப் பந்த் (114)ஆகியோர் அபாரமாக ஆடியும் இந்திய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றியது.
கடந்த 3 மாதங்களாக இங்கிலாந்தில் டி 20, ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து ஏற்கெனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இறுதி மற்றும் 5-ஆவது ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 332, இந்தியா 292 ரன்களை எடுத்தன. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 423/8 குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் குக் 147, ஜோ ரூட் 125 ரன்களை குவித்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா, ஹனுமா விஹாரி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 464 ரன்களை இங்கிலாந்து நிர்ணயித்தது. நான்காம் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்களை எடுத்திருந்தது. 
இந்நிலையில் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ராகுல், ரஹானே தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ரஹானே 37 ரன்களுக்கு மொயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த அறிமுக வீரர் ஹனுமா ரன் ஏதுமின்றி ஸ்டோக்ஸ் பந்தில் வெளியேறினார். அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்களுடன் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தது.
ராகுல் 5-ஆவது சதம்: பின்னர் ராகுல்-ரிஷப் பந்த் இணை சேர்ந்து அதிரடியாக ஆடினர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து 17 பவுண்டரியுடன் ராகுல் தனது 5-ஆவது டெஸ்ட் சதத்தை அடித்தார். 
ரிஷப் பந்த் முதல் சதம்: இந்நிலையில் 74 ஓவர்கள் ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பந்த் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தேநீர் இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 298 ரன்களை எடுத்திருந்தது. ராகுல் 142 (206), பந்த் 101 (118) ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.
30 ஓவர்களில் 131 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த இருவரையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. 75-ஆவது ஓவரில் ஸ்கோர் 300-ஐக் கடந்தது. இருவரும் இணைந்து 200 ரன்கள் சேர்த்த நிலையில், 81.1 ஓவரில் அடில் ரஷீத் பந்தில் ராகுல் போல்டானார். அவர் 1 சிக்ஸர், 20 பவுண்டரியுடன் 224 பந்துகளில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 
அடுத்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரிஷப் பந்த் 4 சிக்ஸர், 15 பவுண்டரியுடன் 146 பந்துகளில் 114 ரன்களை எடுத்த நிலையில் ரஷீத் பந்தில் வெளியேறினார். 
இந்திய அணியை சரிவில் இருந்து மீட்ட இருவரும் அவுட்டானது, இங்கிலாந்து அணியினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
இஷாந்த் 5, ஜடேஜா 13, சமி ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 94.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 345 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது இந்தியா. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், 3, கரன், ரஷீத் தலா 2 விக்கெட்டையும், பிராட், ஸ்டோக்ஸ், மொயின் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். டெஸ்ட் தொடரையும் 4-1 என இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் தொடரோடு, டெஸ்ட் தொடரையும் இழந்து நாடு திரும்புகிறது இந்திய அணி.

வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com