மகளிர் கிரிக்கெட்: இலங்கையுடன் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
By DIN | Published on : 14th September 2018 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வெற்றி மகிழ்ச்சியில் இந்திய மகளிர் அணியினர்.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் ஒரு பகுதியாக இலங்கையுடன் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய அணி.
இலங்கையுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிரணி பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே முதல் ஆட்டத்தை இந்தியா வென்றது.
இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் காலேயில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய மகளிர் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 219 ரன்களை எடுத்தனர். கேப்டன் மிதாலி ராஜ் 52, தனியா பாட்டியா 68, தயாளன் ஹேமலதா 35 ஆகியோர் அபாரமாக ஆடினர். இலங்கை தரப்பில் சமாரி அத்தபத்து 3, உதேஷிகா, சிறிபாலி, தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்திய அணி கடைசி ஓவரில் 3 விக்கெட்டை இழந்தது. கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்களை எடுக்க 121 பந்துகளை செலவிட்டது அணியின் மெதுவான ரன் குவிப்புக்கு காரணமாக அமைந்தது.
இரண்டாவதாக களமிறங்கிய இலங்கை அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 212 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. சமாரி அத்தபத்து 57, சசிகலா சிறிவர்த்தனே 49. இந்திய தரப்பில் மான்ஸி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட், தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இறுதியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
2-0 என தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு, ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் 2 புள்ளிகள் கூடுதலாக கிடைத்தன.