இலங்கை படுதோல்வி

ஆசிய கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இலங்கை படுதோல்வி

ஆசிய கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் அபாரமாக ஆடி 144 ரன்களை குவித்தார்.
 வங்கதேசம்-இலங்கை அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டம் ஐக்கிய அரபு நாடுகளின் துபையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடுகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் வங்கதேசம்-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 அந்த அணியின் தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில் ஆரம்பமே அதிர்ச்சி தருவதாக அமைந்தது. லிட்டன் ரன் ஏதும் எடுக்காமல் மலிங்கா பந்தில் வெளியேறினார். அவருக்கு பின் வந்த ஷகிப் ஹல் ஹசனும் ரன் ஏதுமின்றி மலிங்கா பந்தில் போல்டானார். தமிம் இக்பால் 2 ரன்கள் எடுத்த நிலையில் காயமடைந்து வெளியேறினார்.
 பின்னர் முஷ்பிகுர் ரஹிம்-மொகமது மிதன் இணை ரன்கள் எண்ணிக்கையை உயர்த்தியது. 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 63 ரன்களை குவித்த மிதுன் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் ஆட வந்த மமுத்துல்லா, முஷ்டக் உசேன் ஆகியோர் வெறும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மெஹுதி ஹாசன் 15 ரன்களுக்கும், மொர்டஸா 11, ருபேல் உசேன் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
 அபாரமாக ஆடிக் கொண்டிருந்த முஷ்பிகுர் ரஹிம் 4 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 150 பந்துகளில் 144 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். முஸ்பிஸுர் ரஹ்மான் 10 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வங்கதேசம் 261 ரன்களை எடுத்தது.
 மலிங்கா அபார பந்துவீச்சு: இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா அபாரமாக பந்துவீசி 4-23 விக்கெட்டை வீழ்த்தினார். தனஞ்செய டி சில்வா 2-38, லக்மல், அமிலா, திஸாரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 இலங்கை 124: இலங்கை அணி தரப்பில் உபுல் தரங்கா-குசால் மெண்டிஸ் இணை களமிறங்கியது. தரங்கா ஒருமுனையில் அதிரடியாக ஆடிய நிலையில், மெண்டிஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 27 ரன்கள் சேர்த்த தரங்கா, ரன் ஏதுமின்றி தனஞ்செய டி சில்வாவும் மொர்டஸா பந்தில் ஆட்டமிழந்தனர். பெரைரா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், தாஸுன் சனகா ஆகியோர் ஆடிக் கொண்டிருந்தனர். எனினும் மேத்யூஸ் 16, சனகா 7, திஸாரா பெரைரா 6, லக்மல் 20, தில்ரூவன் 29, அமிலா 4 ரன்களுக்கும், ஆட்டமிழந்தனர். இறுதியில் மொத்தம் 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 124 ரன்களையே எடுத்து இலங்கை அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
 மொர்டஸா , மெஹிதி உசேன் , முஸ்தபிஸுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், ருபேல் உசேன், ஷகிப் அல் அசன், முஷ்டாக் ஹுசேன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com