ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் ஆடி வரும் 1990 காலகட்ட கிரிக்கெட் வீரர்கள்

ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் 1990 காலகட்டத்தில் அறிமுகமான 4 வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் ஆடி வரும் 1990 காலகட்ட கிரிக்கெட் வீரர்கள்

ஓய்வு குறித்த சிந்தனையே இல்லாமல் 1990 காலகட்டத்தில் அறிமுகமான 4 வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
 ஜென்டில்மேன் ஆட்டம் எனப்படும் கிரிக்கெட் உலகம் முழுவதும் சொற்ப நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வருகிறது. டெஸ்ட், 50 ஓவர் ஒரு நாள் ஆட்டம் போன்றவை மட்டுமே ஆடப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட டி 20 ஆட்டங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன.
 குறிப்பாக பெரிய அணிகள் மோதும் டெஸ்ட் ஆட்டங்களைத் தவிர ஏனைய ஆட்டங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில் குறைந்தபட்ச ஓவர்கள் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் கணிசமாக வருகின்றனர். இதனால் அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் ஆண்டுதோறும் அதிகளவில் ஒரு நாள், டி 20 ஆட்டங்கள் நடத்துவதையே விரும்புகின்றன. கிரிக்கெட் வீரர்களுக்கு குறிப்பிட்ட வரையறை இன்றி அதிகளவில் போட்டிகளில் பங்கேற்று கூடுதல் சுமைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் ஒவ்வொரு நாட்டிலும் தற்போது பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடக்கின்றன.
 இதனால் உடல் தகுதி குறைந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நிலை ஏற்படுகிறது.
 2006-இல் அறிமுகமான இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் அண்மையில் இந்தியாவுடன் நடைபெற்ற இறுதி டெஸ்ட்டோடு ஓய்வு பெற்று விட்டார். ஏற்கெனவே 2000-ஆம் ஆண்டுகள் வாக்கில் அறிமுகமான தோனி, சேவாக் போன்றவர்களும் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். தோனியும் விரைவில் குறைந்தபட்ச ஓவர்கள் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறலாம் எனத்தெரிகிறது.
 10 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து ஆடும் வீரர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்து விட்டது.
 இந்நிலையில் 1990-ஆம் ஆண்டு காலகட்டங்களில் அறிமுகமான 4 வீரர்கள் ஓய்வின்றி தொடர்ந்து ஆடி வருவது வியப்பை தருகிறது.
 ஷோயிப் மாலிக் (பாகிஸ்தான்)
 ஷோயிப் தனது 17-ஆவது வயதில் கடந்த 1999-இல் மே.தீவுகளுக்கு எதிராக அறிமுகமானார். சுழற்பந்து வீச்சாளராக கிரிக்கெட் வாழ்க்கை துவங்கிய அவர், தனது பேட்டிங்காலும், முதல்தர பேட்ஸ்மேனாக முன்னேறினார். இதுவரை 156 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷோயிப் பலமுறை கேப்டனாகவும் பதவி வகித்துள்ளார். பாகிஸ்தான் ஒரு நாள், டி 20 அணிகளில் தொடர்ந்து இடம் பிடித்து வரும் அவர் 2019 உலகக் கோப்பை போட்டியிலும் முக்கிய பங்காற்றுவார் எனத் தெரிகிறது.
 ரங்கனா ஹெராத் (இலங்கை)
 கடந்த 1999-இல் ஆஸி. அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார் ஹெராத். முத்தையா முரளிதரன் அணியில் இருந்த வரையில் ஹெராத்தால் குறிப்பிடத்தக்க இடத்தை பெற முடியவில்லை. 2004, 2008, 2010-இல் அணியில் அவ்வப்போது ஆடினார். டெஸ்ட் ஆட்டத்தில் முரளிதரன் ஓய்வு பெற்ற நாள் முதல், இலங்கையின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக ஹெராத் உள்ளார். 34 முறை 5 விக்கெட்டையும், 9 முறை 10 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். 430 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் 40 வயதாகியும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம் பெற்று வருகிறார்.
 கிறிஸ் கெயில் (மே.தீவுகள்)
 டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் ரன்மெஷின் என அழைக்கப்படும் கிறிஸ் கெயில் கடந்த 1999-இல் இந்திய அணிக்கு எதிராக அறிமுகமானார். டெஸ்ட், ஒரு நாள் ஆட்டங்களில் மொத்தம் 7,000 ரன்களை குவித்துள்ளார் கெயில்.
 டி 20 ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்குகிறார். 2 முறை மூன்று சதம் அடித்த 4 வீரர்களில் கெயிலும் ஒருவர். உடல்தகுதி பிரச்னையால் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை. வரும் 2019 உலக் கோப்பையே கெயில் பங்கேற்கும் இறுதி போட்டியாகவும் இருக்கக்கூடும்.
 ஹர்பஜன் சிங் (இந்தியா)
 சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த 1998-இல் அறிமுகமானார். ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 ஆட்டங்களில் ஹாட்ரிக் உள்பட 32 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். இந்திய ஒருநாள் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இடத்தை பிடித்திருந்தார். அஸ்வின், ஜடேஜா வருகையில் கடந்த 2012 முதல் ஹர்பஜன் இடம் கேள்விக்குறியாகி விட்டது.
 38 வயதான அவர் தொடர்ந்து ஐபிஎல் டி 20 ஆட்டங்களில் இடம் பெற்று வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com