
நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இரங்கலும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது. கோழைத்தனமான இந்த செயலில் வங்கதேச அணியினர் தப்பியது நிம்மதியை தருகிறது என்றார்.
நியூஸிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷம் கூறியது: உலகின் ஒரு மூலையில் உள்ள எங்கள் நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பாக இருந்தோம். ஆனால் இந்த சம்பவம் பயங்கரமாக உள்ளது. இதை சொல்ல வார்த்தைகள் இல்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின்: இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உலகின் எந்த பகுதியும் மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இதே போல் ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க், டேவ் வாட்மோர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.