சென்னைக்கு முதல் தோல்வி

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 
சென்னைக்கு முதல் தோல்வி


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 
இரு அணிகளும் இத்துடன் 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், சென்னைக்கு இது முதல் தோல்வியாகும். மாறாக, மும்பைக்கு இது 2-ஆவது வெற்றி. 
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அடித்தது. 
அடுத்து ஆடிய சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களே எடுத்தது. முன்னதாக, டாஸ் வென்ற சென்னை பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த மும்பையில் டி காக்- ரோஹித் சர்மா கூட்டணி முதலில் களம் கண்டது. 
இதில் டி காக் 4 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 
மறுமுனையில் ரோஹித் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜடேஜா வீசிய 8-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யுவராஜ் சிங் 4 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். 
தொடர்ந்து களம் கண்ட கிருணால் பாண்டியா, சூர்யகுமார் யாதவுடன் கூட்டணி அமைக்க, அந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது. அரைசதம் கடந்தார் சூர்யகுமார். மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய கிருணால் பாண்டியா, 42 ரன்களுக்கு வீழ்ந்தார். 
அடுத்த ஓவரிலேயே சூர்யகுமாரும் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவ்வாறாக மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எட்டியது. பாண்டியா 25, பொல்லார்டு 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
சென்னை தரப்பில் தீபக் சாஹர், மோஹித் சர்மா, இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, பிராவோ தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
சென்னை தடுமாற்றம்: இதையடுத்து, 171 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய சென்னை ஆரம்பம் முதலே தடுமாறியது. தொடக்க வீரர் வாட்சன் 5 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த அம்பட்டி ராயுடு டக் அவுட்டானார். ரெய்னா 16 ரன்கள் அடிக்க, அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 58 ரன்கள் விளாசினார்.
கேப்டன் தோனி 12 ரன்களே சேர்க்க, ஜடேஜா 1, பிராவோ 8, சாஹர் 7 என சொற்ப ரன்களில் பேட்டிங் வரிசை சரிந்தது.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது சென்னை. ஷர்துல் தாக்குர் 12, மோஹித் சர்மா ரன்கள் இன்றி களத்தில் இருந்தனர். மும்பை தரப்பில் ஹார்திக் பாண்டியா, மலிங்கா தலா 3, பெஹ்ரென்டார்ஃப் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

சுருக்கமான ஸ்கோர்
மும்பை இந்தியன்ஸ்
20 ஓவர்களில் 
5 விக்கெட் இழப்புக்கு 170
சூர்யகுமார்-59, கிருணால்-42, ஹார்திக்-25*, பொல்லார்டு-17*
பந்துவீச்சு: ஜடேஜா-1/10, 
சாஹர்-1/21, இம்ரான்-1/25


சென்னை சூப்பர் கிங்ஸ்
20 ஓவர்களில் 
8 விக்கெட் இழப்புக்கு 133
ஜாதவ்-58, ரெய்னா-16, 
தோனி-12, ஷர்துல்-12*
பந்துவீச்சு: ஹார்திக்-3/20, மலிங்கா-3/34, 
பெஹ்ரென்டார்ஃப்-2


அதிக ரன்களை எடுத்தவர் டேவிட் வார்னர்(ஹைதராபாத்)


அதிக விக்கெட் வீழ்த்தியவர் சஹல் (பெங்களூரு)

இன்றைய ஆட்டம்
தில்லி-ஹைதராபாத்
இடம்: ஃபெரோஸ் ஷா கோட்லா, தில்லி.
நேரம்: இரவு 8.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com