ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் சேர்ப்பு

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் சேர்ப்பு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த், ராயுடு ஏமாற்றம்
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மற்றும் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் வகையில் இளம் வீரர் ரிஷப் பந்த் சேர்க்கப்படவில்லை.
 இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரும் மே மாதம் 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மே.இ.தீவுகள் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
 போட்டிக்கான அணிகளை அறிவிக்க ஏப். 23 கடைசி நாளாகும். இந்நிலையில் இந்திய அணிப்பட்டியல் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி தேசிய தேர்வாளர் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் செüதரி, கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் பிற்பகல் 3 மணிக்கு உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
 அணி விவரம்
 விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி.
 தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 தொடக்க வரிசை: ராகுலுக்கு வாய்ப்பு
 தொடக்க வரிசையில் ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோர் உள்ளனர். மூன்றாம் நிலை பேட்ஸ்மேனாக கேப்டன் கோலி வழக்கம் போல் களமிறங்குவர். அதே நேரத்தில் மூன்றாம் தொடக்க வீரராக லோகேஷ் ராகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 4-ஆம் நிலை பேட்ஸ்மேன்: விஜய்சங்கர்
 அணியில் மிகவும் சிக்கலை ஏற்படுத்திய விவகாரங்களில் ஒன்றான நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்துக்கு அம்பதி ராயுடு சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக ஆல் ரவுண்டர் விஜய்சங்கர் நான்காவது இடத்தில் களமிறங்குவார் எனத் தெரிகிறது. மிடில் ஆர்டரில் முக்கிய இடமான நான்காம் நிலை பேட்ஸ்மேன் தேர்வு மிகவும் அவசியமானதாகும். விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் வல்லவர் என்பதால் ராயுடுவுக்கு பதில் தேர்வு செய்யப்பட்டார். மிடில் ஆர்டரில் அவருடன் ராகுலும், கேதார் ஜாதவும் களமிறங்க வாய்ப்புள்ளது. ராயுடுவுக்கு உரிய வாய்ப்பு தரப்பட்டும் அவர் சோபிக்கவில்லை என்பதால் தேர்வு பெறவில்லை.
 இரண்டாம் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்
 அணித் தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தியது இரண்டாம் விக்கெட் கீப்பர் இடமாகும். பிரதான விக்கெட் கீப்பராக தோனி உள்ள நிலையில் இரண்டாம் விக்கெட் கீப்பர் இடத்தில் இளம் வீரர் ரிஷப் பந்த் அல்லது தினேஷ் கார்த்திக் என யாரை தேர்வு செய்வது என நிர்வாகம் திணறியது. ரிஷப் பந்த் அண்மைக் காலமாக அபாரமாக ஆடி வருகிறார். அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. ஆனால் விக்கெட் கீப்பிங்கில் அனுபவம் நிறைந்தவராக உள்ளார்.
 உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியில் ஒருவேளை தோனி காயமடைந்தால், காலிறுதி, அரையிறுதி சுற்றில் அனுபவம் நிறைந்த வீரர் உதவி தேவை. இதுதொடர்பாக கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இறுதியில் அனுபவம் நிறைந்த தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம் என தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத் தெரிவித்தார்.
 ஆல் ரவுண்டர்: ரவீந்திர ஜடேஜா
 அணியின் வெற்றி வாய்ப்பில் முக்கிய பங்காற்றும் ஆல் ரவுண்டர் இடத்துக்கு ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவுலிங், பேட்டிங் இரண்டிலும் அவரது திறமையான செயல்பாட்டை கருதி வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஹார்திக் பாண்டியாவும் அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஆல்ரவுண்டர் ஆவார்.
 வேகப்பந்து வீச்சு
 உலகின் அபாயகரமான வேகப்பந்துவீச்சு மும்மூர்த்திகள் என பெயர் பெற்றுள்ள ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். போட்டி நடைபெறும் இங்கிலாந்து மைதானங்களில் இவர்கள் சிறப்பாக பந்துவீசுவர் எனக் கருதப்படுகிறது. நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இடத்தை ஹார்திக் பாண்டியா அல்லது விஜய் சங்கர் நிரப்புவர்.
 சுழற்பந்து வீச்சு
 பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகளை தேடித் தந்துள்ளனர். அவர்களுக்கு துணையாக பந்துவீச மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜா களமிறக்கப்படுவார்.
 வேகப்பந்துவீச்சில் நவ்தீப் சைனி, கலில் அகமது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டன. இருவரும் இங்கிலாந்துக்கு செல்லும் அணியில் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர்களாக செல்வர், பிரதான பந்துவீச்சாளர்கள் எவராவது காயமுற்றால் இவர்கள் இடம்பெறலாம்.
 ஆல்ரவுண்டர் பட்டியலில் விஜய் சங்கர், ஹார்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். 3 ஆல்ரவுண்டர்கள் தேர்வு செய்யப்பட்டால் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெறலாம்.
 வேகப்பந்து வீச்சாளர்கள் இடத்துக்கு பும்ரா, புவனேஸ்வர்குமார், ஷமி ஆகியோர் எளிதில் இடம் பெறுவர். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், சஹல் சேர்க்கப்படுவர். நான்காவது வேகப்பந்து வீச்சாளர் தேர்வு செய்யப்பட்டால் நவ்தீப் சைனி, தீபக் சஹார், இஷாந்த் சர்மா ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
 இந்திய அணி மோதும் போட்டி, நாள், இடம்
 ஜூன் 5 இந்தியா-தென்னாப்பிரிக்கா செளதாம்ப்டன்,
 ஜூன் 9 இந்தியா-ஆஸ்திரேலியா ஓவல், லண்டன்.
 ஜூன் 13 இந்தியா-நியூஸிலாந்து டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்.
 ஜூன் 16 இந்தியா-பாகிஸ்தான் ஓல்ட் டிராபோர்ட், மான்செஸ்டர்.
 ஜூன் 22 இந்தியா-ஆப்கானிஸ்தான் செளதாம்ப்டன்,.
 ஜூன் 27 இந்தியா-மே.இ.தீவுகள் ஓல்ட் டிராபோர்ட், மான்செஸ்டர்.
 ஜூன் 30 இந்தியா-இங்கிலாந்து எட்பாஸ்டன், பர்மிங்ஹாம்.
 ஜூலை 02 இந்தியா-வங்கதேசம் எட்பாஸ்டன், பர்மிங்ஹாம்.
 ஜூலை 06 இந்தியா-இலங்கை ஹெட்டிங்லி, லீட்ஸ்.
 அரையிறுதி ஆட்டங்கள்
 முதல் அரையிறுதி

 ஜூலை 09:
 ஓல்ட் டிராபோர்ட், மான்செஸ்டர்.
 2-ஆவது அரையிறுதி
 ஜூலை 11:
 எட்பாஸ்டன்,
 பர்மிங்ஹாம்.
 இறுதி ஆட்டம்
 ஜூலை 14:
 லார்ட்ஸ், லண்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com