காங்கிரஸில் இணைந்த தந்தை, சகோதரி: பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக ஜடேஜா அறிவிப்பு! மோடி வாழ்த்து!

நன்றி ஜடேஜா. 2019 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வானதற்கு வாழ்த்துகள்...
காங்கிரஸில் இணைந்த தந்தை, சகோதரி: பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக ஜடேஜா அறிவிப்பு! மோடி வாழ்த்து!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் நேற்று அறிவித்தது பிசிசிஐ. 2015 உலகக் கோப்பையில் இடம்பெற்ற தோனி, தவன், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி, ரோஹித் சர்மா ஆகிய 7 வீரர்களுக்கு இந்தமுறையும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரு தமிழ்நாட்டு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில், தான் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக ட்விட்டரில் நேற்று அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா.

இதற்கு பிரதமர் மோடி பதிலளித்ததாவது: நன்றி ஜடேஜா. 2019 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வானதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா பாஜகவில் சமீபத்தில் இணைந்தார். பாஜக அமைச்சர் ஃபல்டு, எம்பி பூணம், ஜாம்நகர் நகரத் தலைவர் ஹஸ்முக் ஹிண்டோச்சா, ஜாம்நகர் மாவட்டத் தலைவர் சந்திரேஷ் படேல் ஆகியோரின் முன்னிலையில் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார் ஜடேஜாவின் மனைவி. 

இந்நிலையில், ஜடேஜாவின் தந்தையும், சகோதரியும், காங்கிரஸ் கட்சியில் சமீபத்தில் இணைந்துள்ளனர். குஜராத் மாநிலம், ஜாம்நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் படேல் சமூக போராட்டக் குழுத் தலைவரும், காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்தவருமான ஹார்திக் படேல் முன்னிலையில், ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங், சகோதரி நயினபா ஆகியோர் காங்கிரஸில் சேர்ந்தனர். ஜடேஜா குடும்பத்தினர் பாஜக, காங்கிரஸ் என இரு கட்சியிலும் இணைந்துள்ள நிலையில் பாஜகவுக்கு தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் ஜடேஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com