போராட்ட வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்கும் டைகர் உட்ஸ்!

இவர் அடுத்தப் பட்டத்தை வெல்ல 11 வருடங்கள் ஆகும் என அப்போது யாருக்கும் தெரியாது...
போராட்ட வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்கும் டைகர் உட்ஸ்!

அகஸ்டாவில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கோல்ப் போட்டியில் 15-வது பட்டம் வென்றார் பிரபல வீரர் டைகர் உட்ஸ். இதன்மூலம் தனது 15-வது முறையாக மேஜர் பட்டத்தை வென்றுள்ளார். 2008-க்குப் பிறகு கடந்த 11 வருடங்களாகப் பெரிய பதக்கம் எதுவும் வெல்லாமல் இருந்த 43 வயது உட்ஸ், சில வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகு இந்த வெற்றியை அடைந்துள்ளதால் மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இது அவருடைய 5-வது மாஸ்டர்ஸ் பட்டம். 2005-க்குப் பிறகு வெல்லும் முதல் பட்டம். இதையடுத்து 18 மேஜர் பட்டங்களை வென்ற ஜேக் நிக்லாஸின் சாதனையை டைகர் உட்ஸ் தாண்டுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

2008-க்குப் பிறகு டைகர் உட்ஸ் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள்:

2008 

14-வது பட்டத்தை வென்றார். யுஎஸ் ஓபன். இவர் அடுத்தப் பட்டத்தை வெல்ல 11 வருடங்கள் ஆகும் என அப்போது யாருக்கும் தெரியாது. 

நவம்பர் 2009

தன்னுடைய ஃபிளோரிடா வீட்டுக்கு அருகே காரில் மயங்கியபடி கிடந்தார் உட்ஸ். அவருடைய கார் மரத்தில் மோதியிருந்தது. 33 வயது உட்ஸுக்குப் பலத்த காயம் உண்டானது. 

பல பெண்களுடன் அவருக்கு உள்ள தொடர்புகளும் வெளியாகின. பிறகு, இதற்காக மன்னிப்பு கோரினார் உட்ஸ். 

ஏப்ரல் 2010

மாஸ்டர்ஸ் போட்டியில் நான்காம் இடம் பெற்றார். மனைவி எலின் இவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து போனார். 7 வருடத் திருமணப் பந்தம் அத்துடன் முறிந்தது. அதே வருடம் அக்டோபர் மாதம் 281 வாரங்களுக்குப் பிறகு நெ.1 கோல்ப் வீரர் என்கிற பெருமையை இழந்தார். 

ஜூன் 2011

காயம் காரணமாக யு.எஸ். ஓபனில் போட்டியிடவில்லை என அறிவித்தார். தரவரிசையில் 50-க்கும் கீழே சென்றார்.

மார்ச் 2012

கடந்த 30 மாதங்களில் முதல் பிஜிஏ டூர் பட்டத்தை வென்றார். 2013 ஆரம்பத்தில் மீண்டும் நெ.1 வீரர் ஆனார். 

2014

காயம் காரணமாக செய்துகொண்ட நான்கு அறுவை சிகிச்சைகளில் முதல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.

2016

காயம் காரணமாக யு.எஸ். ஓபன் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தார்.  

டிசம்பர் 2015

தரவரிசையில் 250-க்கும் கீழே சென்றார். மூன்றாவது அறுவை சிகிச்சையை (நுண்ணிய டிஸ்க் அகற்றல்) விரைவில் மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினார். 

மே 2017

தரவரிசையில் 1199 என்கிற இடத்தை அடைந்தார். மது அருந்திவிட்டு காரை ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். மருந்துகள் உட்கொண்டதால் உண்டான விளைவுகளால், தான் இந்தச் சிக்கலில் மாட்டியதாகப் பிறகு அவர் கூறினார். 

ஜூலை 2018

பிஜிஏ சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவதாக வந்தார். பிறகு டூர் சாம்பியன்ஷிப் போட்டியை வென்றார். கடந்த 5 வருடங்களில் அவர் பெற்ற முதல் வெற்றி இது. தரவரிசையில் 13-வது இடத்துக்கு முன்னேறினார். 

ஏப்ரல் 2019

மாஸ்டர்ஸ் கோல்ப் போட்டியில் 15-வது பட்டம் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com