சூப்பர் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்: வார்னர், பேர்ஸ்டவ் அரை சதம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி வீழ்த்தியது.
சூப்பர் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்: வார்னர், பேர்ஸ்டவ் அரை சதம்


இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி வீழ்த்தியது.
9 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது 2ஆவது தோல்வி ஆகும். முதலில் விளையாடிய சிஎஸ்கே 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. 133 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத், 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டவின் அதிரடியால் அந்த அணி இலக்கை எளிதில் எட்டியது.
ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு சிஎஸ்கே-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் தொடங்கியது.
காயம் காரணமாக சிஎஸ்கே கேப்டன் தோனி ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கேப்டனாக சுரேஷ் ரெய்னா பொறுப்பேற்றார்.
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்ஸன், ஃபாப் டூ பிளெஸிஸ் களம் இறங்கினர். இந்த ஜோடியை ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் திணறியது ஹைதராபாத். அணியின் ஸ்கோர் 79 ஆக இருந்தபோது 9.5ஆவது ஓவரில் ஷாபாஸ் நதீஷ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் வாட்சன். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கு அடுத்த ஓவரில் விஜய் சங்கர் வீசிய பந்தில் பேர்ஸ்டவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார் பிளெஸிஸ். 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார் பிளெஸிஸ். அரை சத வாய்ப்பு அவருக்கு நழுவியது.
கேப்டன் ரெய்னாவுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். அதிரடி காட்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த கூட்டணியை ரஷீத் கான் பிரித்தார். அவர் வீசி பந்தில் எல்பிடபிள்யூ ஆகி 13 ரன்களில் நடையைக் கட்டினார் ரெய்னா.
அவரைத் தொடர்ந்து களம் கண்ட கேதார் ஜாதவ் (1 ரன்), ரஷீத் கான் பந்துவீச்சில் வந்தவேகத்தில் எல்பிடபிள்யூ ஆகி பெவிலியன் சென்றார். விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க ஜடேஜாவும், ராயுடுவும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். ராயுடு 21 பந்துகளில் 25 ரன்களும், ஜடேஜா 20 பந்துகளில் 10 ரன்களும் எடுத்திருந்தனர்.
இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது சிஎஸ்கே.
ஹைதராபாத் அணியின் சார்பில் ரஷீத் கான் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும், நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஹைதராபாதுக்கு 4ஆவது வெற்றி: இதையடுத்து, களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், பேர்ஸ்டவும் அதிரடி ஜாலம் காட்டினர். பேர்ஸ்டவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 44 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.
வார்னர் 50 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் வில்லியம்சன் 3 ரன்களில் நடையைக் கட்டினார்.
விஜய் சங்கர் 7 ரன்களிலும், தீபக் ஹூடா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். யூசஃப் பதான், பேர்ஸ்டவ் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
16.5 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து ஹைதராபாத் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே சார்பில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும், கரன் சர்மா, தீபக் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இது அந்த அணிக்கு 4ஆவது வெற்றியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com