தில்லி வெற்றி
By DIN | Published On : 21st April 2019 01:31 AM | Last Updated : 21st April 2019 01:31 AM | அ+அ அ- |

பஞ்சாபை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தில்லி. தவன் 56. ஷிரேயஸ் ஐயர் 58 ரன்களுடன் தங்கள் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
முதலில் ஆடிய பஞ்சாப் 163/5 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய தில்லி 166/5 ரன்களுடன் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தில்லி அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.
விக்கெட்டுகள் சரிவு: இதையடுத்து பஞ்சாப் தரப்பில் ராகுல், கெயில் களமிறங்கினர். ஆனால் தில்லி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ராகுல் 9, மயங்க் அகர்வால் 2 , டேவிட் மில்லர் 7 ரன்களுடன் வெளியேறினர்.
கெயில் 28-ஆவது
அரைசதம்: மறுமுனையில் கிறிஸ் கெயில் மட்டுமே அதிரடியாக ஆடி 28-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். 25 பந்துகளில் அவர் அரைசதத்தை பெற்றார்.
12-ஆவது ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை கடந்தது. 5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 69 ரன்களை விளாசிய கெயிலை, அவுட் செய்தார் லேமிச்சேன். அவருக்கு பின் வந்த சாம் கரண் டக் அவுட்டானார். மந்தீப் சிங் 30 ரன்களுடன் அக்ஸர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் அஸ்வின் 16 ரன்களுடன் ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார்.
ஹர்ப்ரீத் பிரார் 20, வில்ஜோயன் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது பஞ்சாப்.
சந்தீப் லேமிச்சேன் 3-40, ரபாடா 2-23, அக்ஸர் பட்டேல் 2-22 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
164 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தில்லி அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 13 ரன்களுடன் மந்தீப்பால் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர் ஷிகர் தவன்-கேப்டன் ஷிரேயஸ் ஐயர் இணை ரன்களை குவித்தது.
தவன் 35-ஆவது அரை சதம்: அதிரடி வீரர் ஷிகர்தவன் 35-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். பின்னர் 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 56 ரன்கள் எடுத்த தவனை அவுட்டாக்கினார் வில்ஜோயன். சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 7 ரன்களுடன் வில்ஜோயன் பந்தில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய காலின் இங்கிராம் 4 பவுண்டரியுடன் 19 ரன்களை எடுத்து வெளியேறினார். அகஸர் பட்டேல் 1 ரன்னோடு வெளியேறினார்.
ஷிரேயஸ் ஐயர் 12-ஆவது அரைசதம்: தில்லி கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 45 பந்துகளில் தனது 12-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 58 ரன்களுடன் ஷிரேயஸ் ஐயரும், ரூதர்போர்ட் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இறுதியில் 19.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்தது தில்லி.
பஞ்சாப் தரப்பில் வில்ஜோயன் 2-39 விக்கெட்டை சாய்த்தார்.
வீணானது கெயில் ஆட்டம்: அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 69 ரன்களை சேர்த்த நிலையில் அவரது ஆட்டம் விழலுக்கு இறைத்த நீர் போலானது.
புள்ளிகள் பட்டியல்
அணிகள்
சென்னை 9 7 2 14
மும்பை 10 6 4 12
தில்லி 10 6 4 12
பஞ்சாப் 10 5 5 10
ஹைதராபாத் 8 4 4 8
கொல்கத்தா 9 4 5 8
ராஜஸ்தான் 9 3 6 6
பெங்களூரு 9 2 7 4