மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். கேப்டன் ஸ்மித்-ரியான் பராக் இணை அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். கேப்டன் ஸ்மித்-ரியான் பராக் இணை அபாரமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை மாலை ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை தரப்பில் குயிண்டன் டி காக்-ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் 5 ரன்களுடன் ஷிரேயஸ் கோபால் பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
பின்னர் டி காக், சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சூரியகுமார் யாதவ் 34, ஹார்திக் பாண்டியா 23, பொல்லார்ட் 10 என அவுட்டாகி வெளியேறினர். 
டி காக் 3-ஆவது அரைசதம்:
மறுமுனையில் அற்புதமாக ஆடிய டி காக் 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 65 ரன்களை விளாசி தனது 3-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்து அவுட்டானார்.
பென் கட்டிங் 13, க்ருணால் பாண்டியா 2 ரன்களோடு களத்தில் இருந்தனர்.
இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்தது மும்பை.
ராஜஸ்தான் தரப்பில் ஷிரேயஸ் கோபால் 2-21 விக்கெட்டுகளையும், பின்னி, ஆர்ச்சர், உனதிகட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி: 162 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரஹானே 12 ரன்கள் எடுத்த நிலையில், ராகுல் சஹார் பந்தில் அவுட்டானார். பின்னர் சஞ்சு சாம்சன்-ஸ்மித் இணை ஸ்கோரை உயர்த்தியது.
1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 35 ரன்களுடன் சஞ்சு சாம்சனும், பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதுமின்றியும் சஹார் பந்தில் வெளியேறினர். 
பின்னர் ஸ்மித்-ரியான் பராக் இணைந்து அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 
அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்த பராக் 17 வயதே ஆன ரியான் பராக் 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 43 ரன்களைவிளாசி ரன் அவுட்டானார். ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சிறப்பை தவற விட்டார்.
அவருக்கு பின் வந்த அஷ்டன் டர்னர் பும்ரா பந்தில் எல்பிடபிள்யு ஆகி கோல்டன் டக் அவுட்டானார். 
ஸ்மித் அரைசதம்: 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 59 ரன்களை விளாசிய ஸ்மித்தும், 7 ரன்களுடன் பின்னியும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் 6 புள்ளிகளை பெற்றது.
ராஜஸ்தான் கேப்டனாக ஸ்மித் நியமனம், ரஹானே திடீர் நீக்கம்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே திடீரென நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் அந்த சோபிக்கவில்லை. 8 ஆட்டங்களில் 6-இல் தோல்வியுற்றனர். கடந்த 2018-இல் சீசன் தொடக்கத்தில் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் தென்னாப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய பிரச்னையால் தடை விதிக்கப்பட்டது. ஓராண்டு தடை நீங்கி தற்போது மீண்டும் ஸ்மித் ஐபிஎல் சீசனில் ஆடி வருகிறார். 
இந்த சீசனில் எதிர்வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவிக்க ஏதுவாக ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஹானே நீக்கப்பட்டுள்ளார். வரும் மே 1-ஆம் தேதி வரை மட்டுமே ஸ்மித் ஆடுவார். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் போன்ற இங்கிலாந்து வீரர்கள் அடுத்த வாரம் ஊர் திரும்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com