ஹைதராபாத் அபார வெற்றி

கொல்கத்தா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஹைதராபாத். அதன் தொடக்க வீரர்கள் வார்னர்-பேர்ஸ்டோவ் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர்.
ஹைதராபாத் அபார வெற்றி

கொல்கத்தா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஹைதராபாத். அதன் தொடக்க வீரர்கள் வார்னர்-பேர்ஸ்டோவ் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஹைதராபாதில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா தரப்பில் களமிறங்கிய கிறிஸ் லீன்-சுனில் நரைன் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 8 பந்துகளில் 25 ரன்களை எடுத்த நரைன் மற்றும் ஷுப்மன் கில் 3 ரன்களுடன் கலில் அகமது பந்துவீச்சில் அவுட்டாயினர். நிதீஷ் ராணா 11, கேப்டன் தினேஷ் கார்த்திக் 6 என சொற்ப ரன்களில் வெளியேற கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.
பின்னர் இளம் வீரர் ரிங்கு சிங்-கிறிஸ் லீனுடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 30 ரன்களுடன் ரிங்கு சிங்கை வெளியேற்றினார் சந்தீப் சர்மா.
கிறிஸ் லீன் 9-ஆவது அரைசதம்
1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 51 ரன்களை விளாசிய கிறிஸ் லீனை அவுட்டாக்கினார் கலில் அகமது. அவர் தனது 9-ஆவது ஐபிஎல் அரைசதத்தையும் பதிவு செய்தார். 
ரஸ்ஸல் ஏமாற்றம்
அதிரடி வீரர் ரஸ்ஸலை 2 சிக்ஸருடன், 15 ரன்களோடு வெளியேற்றினார் புவனேஸ்வர். பியுஷ் சாவ்லா 4 ரன்களுடன் ரஷித் கான் பந்துவீச்சில் அவுட்டானார்.  கே.சி.கரியப்பா 9 ரன்களுடனும், பிரிதிவிராஜ் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். 
இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை குவித்தது கொல்கத்தா. 
கலில் அகமது 3 விக்கெட் 
ஹைதராபாத் தரப்பில் இடதுகை பந்துவீச்சாளர் கலில் அகமது 3-33, புவனேஸ்வர் குமார் 2-35 விக்கெட்டுகளையும், சந்தீப், ரஷித் கான் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
ஹைதராபாத் வெற்றி
160 ரன்கள் வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி சார்பில் வார்னர்-பேர்ஸ்டோவ் இணை களமிறங்கி, கொல்கத்தா பந்துவீச்சை பதம் பார்த்தது. இதனால் ஸ்கோர் 6 ஓவர்களில் 72-ஐ கடந்தது. அறிமுக பந்துவீச்சாளர்கள் கரியப்பா-பிரிதிவிராஜ் இணைந்து 36 ரன்களை வாரி வழங்கினர்.
வார்னர் 42-ஆவது ஐபிஎல் அரைசதம்
5 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 67 ரன்களை குவித்த வார்னர் தனது 42-ஆவது அரைசதத்தையும் பதிவு செய்து பிரித்விராஜ் பந்தில் அவுட்டானார்.
பேர்ஸ்டோவ் அரைசதம்
அதே போல் 4 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 80 ரன்களை விளாசி பேர்ஸ்டோவும், 8 ரன்களுடன் கேப்டன் கேன் வில்லியம்ஸனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இறுதியில் 5 ஓவர்கள் மீதமிருக்க 15 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை எடுத்து வென்றது ஹைதராபாத். கொல்கத்தா தரப்பில் பிரித்விராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் ஹைதராபாத் 10 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு முன்னேறியது. அதே நேரத்தில் கொல்கத்தா 6-ஆவது இடத்தில் உள்ளது.
டேவிட் வார்னர் 517 ரன்கள்
ஐபிஎல் 2019 சீசனில் ஒட்டுமொத்தமாக 517 ரன்களை குவித்துள்ளார் ஹைதராபாத் வீரர் டேவிட் வார்னர். இதில் 1 சதம், 6 அரைசதம், அடங்கும்.


புள்ளிகள் பட்டியல்

அணிகள்    

சென்னை     9    7    2    14
மும்பை     10    6    4    12
தில்லி    10    6    4    12
ஹைதராபாத்    9    5    4    10
பஞ்சாப்    10    5    5    10
கொல்கத்தா    10    4    6    8
ராஜஸ்தான்    9    3    6    6
பெங்களூரு    9    2    7    4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com