ஹைதராபாத் அபார வெற்றி: கடைசி ஆட்டத்தை அதிரடியாக நிறைவு செய்தார் வார்னர்

பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத். அந்த அணியின் வெற்றிக்கு வார்னர், ரஷித் கான், கலீல் அகமது முக்கிய பங்காற்றினார்கள்.
ஹைதராபாத் அபார வெற்றி: கடைசி ஆட்டத்தை அதிரடியாக நிறைவு செய்தார் வார்னர்


பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத். அந்த அணியின் வெற்றிக்கு வார்னர், ரஷித் கான், கலீல் அகமது முக்கிய பங்காற்றினார்கள்.
முதலில் ஆடிய ஹைதராபாத் 212 /6 ரன்களையும், இரண்டாவதாக ஆடிய பஞ்சாப் அணி 167 ரன்களுக்கு 8 விக்கெட்டை இழந்து தோற்றது..
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஹைதராபாதில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்தது.
பிளே ஆஃப் சுற்றில் நுழைய ஹைதராபாத்-பஞ்சாப் உள்ளிட்ட இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். 
இதையடுத்து ஹைதராபாத் தரப்பில் வார்னர், ரித்திமன் சாஹா களமிறங்கி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். 
இதனால் 5 ஓவர்களில் ஸ்கோர் 66-ஐ கடந்தது. 
1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 28 ரன்களை எடுத்திருந்த சாஹாவை அவுட்டாக்கினார் முருகன் அஸ்வின். 
வார்னர் 44-ஆவது அரைசதம்: மறுமுனையில் அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் தனது 44-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். அவருடன் இணைந்து மணிஷ் பாண்டே ரன்களை விளாசினார். எனினும் 36 ரன்கள் எடுத்த மணிஷ், அஸ்வின் பந்துவீச்சில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
சிறிது நேரத்திலேயே 2 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 81 ரன்களை விளாசிய வார்னரும், அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்திருந்தது ஹைதராபாத்.
பின்னர் கேப்டன் கேன் வில்லியம்ஸனை 14 ரன்களுக்கு வெளியேற்றினார் ஷமி. மேலும் 20 ரன்கள் எடுத்திருந்த முகமது நபியையும் போல்டாக்கினார் ஷமி. ரஷித் கான் 1 ரன்னுடன் வெளியறினார்.
விஜய் சங்கர், 7, அபிஷேக் சர்மா 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களை குவித்தது ஹைதராபாத். பஞ்சாப் தரப்பில் அஸ்வின் 2-30, ஷமி 2-36, அர்ஷ்தீப் சிங் 1-42, முருகன் அஸ்வின் 1-32 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
212 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் 4 ரன்களுடன் கலீல் அகமது பந்தில் அவுட்டானார். பின்னர் லோகேஷ் ராகுல்-மயங்க் அகர்வால் இணை ரன்களை சேர்த்தது. 1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 27 ரன்களை சேர்த்த மயங்க், ரஷித் கான் பந்துவீச்சில் வெளியேறினார்.
விக்கெட்டுகள் வீழ்ச்சி: அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்த முயன்ற நிக்கோலஸ் பூரன் தலா 2 சிக்ஸர், பவுண்டரியுடன் 21 ரன்களை சேர்த்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் புவனேஸ்வரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ரஷித் கான் பந்துவீச்சில் கேப்டன் அஸ்வின் கோல்டன் டக் அவுட்டானார். டேவிட் மில்லர் 11 ரன்களுடன் வெளியேறிய நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது பஞ்சாப்.
லோகேஷ் ராகுல் விஸ்வரூபம்: மறுமுனையில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ராகுல், 5 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 79 ரன்களுக்கு கலீல் அகமது பந்தில் வெளியேறினார்.  பிரபு சிம்ரன் சிங் 16 ரன்களோடும், முஜிப்பூர் ரஹ்மான் டக் அவுட்டானார்கள். 
20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது பஞ்சாப்.
கலில், ரஷித் 3 விக்கெட்: ஹைதராபாத் தரப்பில் கலீல் அகமது 3-40, ரஷித் கான் 3-21, சந்தீப் சர்மா 2-33 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது ஹைதராபாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com