சதம் அடித்து மிரட்டிய ஸ்மித்: 122-இல் இருந்து 284-க்கு அழைத்துச் சென்று அபாரம்

இங்கிலாந்துடனான முதல் ஆஷஸ் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
நன்றி: டிவிட்டர்/ஐசிசி
நன்றி: டிவிட்டர்/ஐசிசி


இங்கிலாந்துடனான முதல் ஆஷஸ் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் அடங்கிய ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து வேகத்துக்கு கட்டுப்பட்டு அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். வார்னர் 2, பான்கிராஃப்ட் 8, கவாஜா 13 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனால், அந்த அணி 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பிறகு, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் அந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த பாட்னர்ஷிப் நல்ல நிலையில் வந்துகொண்டிருந்த நேரத்தில், 35 ரன்கள் எடுத்திருந்த ஹெட் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி மீண்டும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. வேட் 1, பெய்ன் 5, பேட்டின்சன் 0, கம்மின்ஸ் 5 என ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணி 122 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்தின் மிரட்டல் பந்துவீச்சால், அந்த அணி 150 ரன்களைக் கடப்பதே சிக்கலாக இருந்தது. 

இந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார் அனுபவ பீட்டர் சிடில். தொடக்கத்தில் ஸ்டீவ் ஸ்மித் இன்னிங்ஸை கட்டுக்குள் வைத்து அரைசதத்தைக் கடந்தார். அதன்பிறகு, சிடிலும் சற்று நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். இதனால், 150-ஐ கடக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 200 ரன்களை எட்டியது. 

9-வது விக்கெட்டுக்கு இந்த இணை 88 ரன்கள் சேர்த்திருந்தபோது, 44 எடுத்திருந்த சிடில் மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். சிடில் ஆட்டமிழக்கும்போது ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்களுடன் களத்தில் இருந்தார். அதன்பிறகு, நாதன் லயான் ஒத்துழைப்புடன் பெரும்பாலான ஸ்டிரைக்கை தன்வசப்படுத்திக்கொண்டு ஸ்மித் துரிதமாக விளையாடினார். 

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 24-வது சதத்தை ஸ்மித் எட்டினார். இவரே ஸ்டிரைக்கில் இருந்ததால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியாமல் திணறினர்.

சதம் அடித்த இவர் டி20 ஆட்டம் போல் பவுண்டரிகளாக விளாசினார். 1 ரன் எடுக்க வேண்டும் என்று ஜோ ரூட் பீல்டர்களை எல்லைக் கோட்டில் நிற்க வைத்தாலும், ஸ்டீவ் ஸ்மித் டீலிங் பவுண்டரிகளிலேயே இருந்தது. இதனால், அந்த அணி 250 ரன்களைக் கடந்தது. இதன்மூலம், ஒரு கட்டத்தில் 300 ரன்களைக் கூட கடக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், ஸ்மித் 144 ரன்கள் எடுத்திருந்தபோது பிராட் பந்தில் போல்டானார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்டீவ் ஸ்மித், நாதன் லயான் இணை 10-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்ததது. இதில், ஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்கள் மட்டும் 59 ஆகும். லயான் 12 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இங்கிலாந்து அணியின் முதன்மைப் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக பந்துவீசமுடியாமல் போனது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அவர் வெறும் 4 ஓவர்கள் மட்டுமே வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com