இரு நாள்களில் 10 தவறுகள்: ஆஷஸ் தொடரில் சர்ச்சைக்குள்ளாகும் நடுவர்களின் முடிவுகள்!

இரு நாள்களில் கள நடுவர்கள் செய்துள்ள 10 தவறுகள் கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது...
இரு நாள்களில் 10 தவறுகள்: ஆஷஸ் தொடரில் சர்ச்சைக்குள்ளாகும் நடுவர்களின் முடிவுகள்!

ஆஷஸ் தொடர் ஆரம்பித்து இரு நாள்கள் தான் முடிந்துள்ளன. அதற்குள் கள நடுவர்கள் 10 தவறுகளைச் செய்துள்ளது பரபரப்பையும் பல கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆஷஸ் தொடர் ஒரு பகுதியாக ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களைக் குவித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் வியாழக்கிழமை எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 144, பீட்டல் சிடில் 44 ஆகியோர் அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்நிலையில் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்திருந்தது.  2-வது நாளின் முடிவில், அந்த அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களை எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 125 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இரு நாள்களில் கள நடுவர்கள் செய்துள்ள 10 தவறுகள் கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள், நிபுணர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டிஆர்எஸ் உள்ளதால் ஓரளவு தவறுகள் களையப்பட்டாலும் இது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்குமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது. அந்த 10 தவறுகளைக் காண்போம்:

முதல் தவறு

ஓவர் 1.1: 2-வது ஓவரிலேயே தொடங்கிவிட்டது. பிராட் பந்துவீச்சை எதிர்கொண்ட ஆஸி.யின் டேவிட் வார்னர், லெக் சைடில் ஆட முயற்சித்தபோது பந்து அவரது பேட்டை லேசாக உரசிச் சென்றது. விக்கெட் கீப்பர் மட்டும் கேள்வி கேட்டார். கள நடுவர் அலீம் டர் ஒப்புக்கொள்ளவில்லை. இவ்வளவு சீக்கிரத்தில் டிஆர்எஸ் வேண்டாம் என அந்த வாய்ப்பை மறுத்துவிட்டது இங்கிலாந்து. இதனால் தப்பித்தார் வார்னர். எனினும் மொத்தமே 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நடுவரின் தவறால் இங்கிலாந்து அணிக்குப் பெரிய சேதாரமில்லை.

2-வது தவறு

ஓவர் 3.5: வார்னரின் பேடில் பந்து பட்டது. நடுவர் அவுட் அன அறிவித்தார். வார்னரும் உடனடியாகக் கிளம்பிவிட்டார். அதன்பிறகுதான் தெரிந்தது, அது அவுட் இல்லை என. ஹாக் -ஐ தொழில்நுட்பத்தில் பந்து லெக் ஸ்டம்பில் படாமல் சென்றது. சரி, போன தவறுக்கு இது சரியா போச்சு என்றுதான் இதற்குப் பதிலளிப்பார்கள் இங்கிலாந்து வீரர்கள்

3-வது தவறு

ஓவர் 14.2: நான்கு ஓவர்கள் கூட முடியவில்லை, அதற்குள் இரு தவறுகள் என்பது கள நடுவர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். கவாஜாவின் பேட்டில் பந்து உரசி பேர்ஸ்டோவிடம் கேட்சாக மாறியது. ஆனால் நடுவர் இதை ஏற்கவில்லை. உடனே டிஆர்எஸ்-ஸின் உதவியை நாடினார் ரூட். அவர் சிகப்பு விளக்கை எரியவிட்டார். நடையைக் கட்டினார் கவாஜா. 15 ஓவர்களுக்குள் மூன்று தவறுகள்! ஆனால் கள நடுவர்களின் வேடிக்கை இத்துடன் முடியவில்லை.

4-வது தவறு

ஓவர் 33.5: அடுத்த 20 ஓவர்கள் கூட முடியவில்லை. மற்றுமொரு தவறு. பிராடின் பந்து ஸ்மித்தின் பேடில் பட்டது. அலீம் டர், பிராடின் எல்பிடபிள்யூ கோரிக்கையை ஏற்றார். ஆனால் இது தவறு என உணர்ந்த ஸ்மித் டிஆர்எஸ்-ஸை உதவிக்கு அழைத்தார். ஸ்டம்பிலிருந்து ஓர் அங்குலம் இடைவெளி விட்டு சென்றது பந்து. தொழில்நுட்பம் ஸ்மித்தைக் காப்பாற்றியது. இல்லாவிட்டால் அற்புதமான  இன்னிங்ஸை நம்மால் பார்த்திருக்கமுடியாது. அப்போது ஸ்மித் 34 ரன்கள் எடுத்திருந்தார். 

5-வது தவறு

ஓவர் 34.6: அடுத்த ஓவரில் மற்றுமொரு தவறு! மேத்யூ வேட் ஒரு ரன் மட்டும்தான் எடுத்திருந்தார். பந்து பேடில் பட்டவுடன் அப்பீல் செய்தார் பந்துவீச்சாளர் வோக்ஸ். வாய்ப்பே இல்லை என்றார் ஜோயல் வில்சன். கூப்பிடு டிஆர்எஸ்ஸை என்றார் ரூட். அது அவருக்கு மீண்டும் சாதகமான பதிலைத் தந்தது. நடுவர் ஒரு வாய்ப்பளித்தும் தொழில்நுட்பத்தின் கண்ணில் சிக்கிக்கொண்டார் வேட். 

6-வது தவறு

ஓவர் 39.6: அந்த ஓவரில் தான் டிம்பெயின் அவுட் ஆனார். ஆஸி. அணி மோசமான நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த இரண்டாவது பந்தில் மீண்டுமொரு நடுவரின் தவறு வெளிப்பட்டது. ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபிள்யூ ஆனார் பேட்டின்சன். ரெவ்யூ கைவசம் இருந்தும் பேட்டின்சன் பயன்படுத்தவில்லை. ஸ்மித் களத்தில் இருப்பதால் விட்டுக்கொடுத்தார். கடைசியில் பந்து லெக் ஸ்டம்பைத் தவறவிட்டதுதான் தெரிந்தது. அலீம் டரின் மற்றொரு தவறு இது. 

ஒரே நாளில் ஏழு தவறுகள். சாதக, பாதகங்களை இரு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் பெற்றுக்கொண்டதுதான் ஆச்சர்யம்.

2-வது நாள்

7-வது தவறு

ஓவர் 14.2: இன்றாவது நடுவர்களுக்கு நல்லபடியாக விடியுமா என்று எண்ணாத ரசிகர்கள் இல்லை. ஆனால் நாளின் தொடக்கத்திலேயே தவறு ஆரம்பமானது. அப்போது பர்ன்ஸ், 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். லயன் வீசிய பந்து, அவருடைய காலில் பட்டது. தனது வழக்கமான பாணியில் அவுட் கேட்டார் லயன். இல்லை எனத் தலையாட்டினார் நடுவர். ஆனால் அந்தப் பந்து லெக் ஸ்டம்பைப் பதம் பார்த்தது பிறகுதான் தெரியவந்தது. நடுவரின் தவறால் தப்பித்த பர்ன்ஸ், 2-வது நாளின் முடிவில் 125 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்!

8-வது தவறு

ஓவர் 20.6: இது மிகவும் விசித்திரமானது. பேட்டின்சன் வீசிய பந்தைத் தடுத்தாட முயன்றார் ரூட். ஆனால் பந்து பேட்டை உரசி சென்று விக்கெட் கீப்பரிடம் கேட்சாக மாறியதாக அப்பீல் செய்தார்கள் இங்கிலாந்து வீரர்கள். இதற்கு நடுவரும் சம்மதம் தெரிவித்து அவுட் என அறிவித்தார். இதை ஏற்காத ரூட், டிஆர்எஸ்ஸின் உதவியை நாடினார். அப்போது தான் தெரிந்தது, பந்து பேட்டை உரசவில்லை, ஸ்டம்பை உரசிச் சென்றது என. ஸ்டம்பில் பந்து பட்ட பிறகும் பைல்ஸ் கீழே விழவில்லை. 

10-வது தவறு

ஓவர் 33.2: ரூட் 14 ரன்களில் இருந்தார். சிடில் வீசிய பந்து பேடில் பட்டவுடன் அவுட் என அறிவித்தார் நடுவர். இதையும் ஏற்காத ரூட், மீண்டும் தொழில்நுட்ப உதவியை நாடினார். பந்து பேட்டில் பட்டுச் சென்றது தெரியவந்ததால் மீண்டும் தப்பித்தார் ரூட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com