2-ஆவது டி20: டிஎல்எஸ் முறையில் இந்தியா வெற்றி

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் பலத்த மழையால பாதிக்கப்பட்ட நிலையில் டிஎல்எஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது
2-ஆவது டி20: டிஎல்எஸ் முறையில் இந்தியா வெற்றி

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் பலத்த மழையால பாதிக்கப்பட்ட நிலையில் டிஎல்எஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
 இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 முதல் ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் 2-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
 இதையடுத்து ரோஹித் சர்மா-ஷிகர் தவன் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் ஆரம்பத்தில் நிதானமாகவே பேட்டிங் செய்தனர். பின்னர் இருவரும் அடித்து ஆடியதால் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
 3 பவுண்டரியுடன் 23 ரன்களை எடுத்த தவனை போல்டாக்கினார் கீமோ பால். 8-ஆவது ஓவர் முடிவில் ஸ்கோர் 68/1 ஆக இருந்தது.
 ரோஹித் 17-ஆவது அரைசதம்: டி20 ஆட்டங்களில் ரோஹித் சர்மா தனது 17-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். 3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 51பந்துகளில் 67 ரன்களை சேர்த்து ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட்டானார். இளம் வீரர் ரிஷப் பந்த் முதல் ஆட்டத்தைப் போலவே இதிலும் 4 ரன்களுடன் தாமஸ் பந்துவீச்சில் அவுட்டானார். 15-ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.
 கேப்டன் விராட் கோலி தலா 1 சிக்ஸர், பவுண்டரியுடன் 28 ரன்களுடன் காட்ரெல் பந்தில் போல்டானார். மணிஷ் பாண்டே 6 ரன்களுடன் காட்ரெல் பந்தில் பெவிலியன் திரும்பினார்.
 க்ருணால் பாண்டியா (2 சிக்ஸர்கள்) 20 ரன்களுடன், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 20 ரன்களை எடுத்த நிலையில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது இந்தியா.
 மே.இ.தீவுகள் தரப்பில் தாமஸ் 2-27, காட்ரெல் 2-25 விக்கெட்டை வீழ்த்தினர்.
 168 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவு அணி தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. சுனில் நரைன் 4, எவின்லெவிஸ் 0 அவுட்டானார்கள்.
 நிக்கோலஸ் பூரண்-ரோவ்மேன் பவல் இணை அற்புதமாக ஆடி ரன்களை சேகரித்தது. நிக்கோலஸ் 19 ரன்களுடன் க்ருணால் பாண்டியா பந்தில் வெளியேறினார்.
 பவல் அரைசதம்: 3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 54 ரன்கள் விளாசி க்ருணால் பாண்டியா பந்தில் போல்டானார் பவல். 5 ஓவர்களில் வெற்றிக்கு 74 ரன்கள் தேவை என்ற நிலையில் இடையில் மோசமான வானிலையால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அப்போது 15.3 ஓவரில் 98/4 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது மே.இ.தீவுகள்.
 பலத்த மழை: மீண்டும் லாடர்ஹில் மைதானம் உள்ள பகுதியில் கடும் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து, பலத்த மழை பெய்ததால் ஆட்டம் மீண்டும் தொடங்குமா என கேள்விக்குறி எழுந்தது.
 தொடரை கைப்பற்றியது: இதையடுத்து டிஎல்எஸ் முறையில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
 இதன் மூலம் 3 ஆட்டங்கள் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியுள்ளது.
 ரோஹித் சர்மா உலக சாதனை
 இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மா டி 20 ஆட்டங்களில் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
 104 சிக்ஸர்களுடன், மே.இ.தீவுகளின் கிறிஸ் கெயிலுக்கு (105 சிக்ஸர்கள்) இரண்டாவது இடத்தில் இருந்த ரோஹித் 2-ஆவது டி20 ஆட்டத்தில் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் 106 சிக்ஸர்கள் அடித்து டி20 ஆட்டத்தில் புதிய சாதனையை படைத்துள்ளார் ரோஹித்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com