முதல் ஆஷஸ் டெஸ்ட்: 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி

முதல் ஆஷஸ் டெஸ்ட்: 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் மிகப்பெரிய வரலாறு கொண்டது ஆஷஸ் டெஸ்ட் தொடர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் மிகப்பெரிய வரலாறு கொண்ட இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர், கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 144 ரன்கள் குவித்தார். ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராரி பர்ன்ஸ் 133 ரன்கள் எடுத்தார். லயன், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸி. அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 487 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 142 ரன்கள் விளாசினார். மேத்யூ வேட் 110 ரன்கள் சேர்த்தார். பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இந்நிலையில், 398 ரன்கள் என்ற கடின இலக்குடன் 5-ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால், 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. அபாரமாகப் பந்துவீசிய நாதன் லயன் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரு இன்னிங்ஸிலும் சதம் கண்ட ஸ்டீவ் ஸ்மித், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com