ரிஷப் பந்தின் தொடர் தோல்விகள்: காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?

ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற கம்பீரமான பெருமை ரிஷப் பந்துக்கு உண்டு... 
ரிஷப் பந்தின் தொடர் தோல்விகள்: காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?

ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற கம்பீரமான பெருமை ரிஷப் பந்துக்கு உண்டு. ஆனால் அவரால் இன்னமும் ஒருநாள், டி20 ஆட்டங்களில் தன்னுடைய முத்திரையைப் பதிக்க முடியாத நிலையே உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இதுவரை 9 டெஸ்டுகளில் விளையாடியுள்ள பந்த், 2 சதங்களையும் 2 அரை சதங்களையும் எடுத்துள்ளார். ஆனால் 9 ஒருநாள், 17 20 ஆட்டங்களில் விளையாடியும் பந்தால் ஒரு அரை சதம் மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களில் ஒரு அரை சதமும் இல்லை. அதிகபட்சமாக உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக 48 ரன்கள் எடுத்தார். பலமுறை நன்கு ஆட ஆரம்பித்து 20, 30 ரன்களுக்குள் ஆட்டமிழப்பதே இவரது வாடிக்கையாக உள்ளது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு உரிய பக்குவம் ரிஷப் பந்துக்கு உள்ளதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

அதேபோல டி20யில் ஐபிஎல் அதிரடியை ரிஷப் பந்தால் இன்னமும் வெளிப்படுத்த முடியவில்லை. கடைசி 4 டி20 ஆட்டங்களில் அவர் எடுத்த ரன்கள் - 3, 1, 0, 4. இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது பிசிசிஐ. 

விராட் கோலியும் இந்திய அணி நிர்வாகமும் ரிஷப் பந்த், சிறப்பாக விளையாடி தோனிக்கு மாற்றாக தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணி பல வாய்ப்புகளை வழங்குகிறது. ஆனால் ஒருநாள், டி20 ஆட்டங்களில் இதுவரை ஏமாற்றங்களையே அளித்துள்ளார் ரிஷப் பந்த். டெஸ்ட் ஆட்டத்தில் வெளிப்பட்ட திறமையும் பொறுப்புணர்வும் ஒருநாள், டி20 ஆட்டங்களில் வெளிப்படவில்லை. இதனால் ஒருநாள், டி20 ஆட்டங்களில் நிச்சயம் நன்கு ஆடுவார், அதுவரை காத்திருப்போம் என்கிற நிலையே உள்ளது. 

ரிஷப் பந்துக்குப் போட்டியாக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் என பல விக்கெட் கீப்பர்கள் வரிசையில் உள்ளார்கள். இதனால் இதற்குப் பிறகாவது பொறுப்புடன் விளையாடி, அதிக ரன்கள் சேர்த்து, தன் இடத்தை ரிஷப் பந்த் தக்கவைத்துக்கொள்வார் என்று இந்திய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com