பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: இரு மூத்த வீரர்களுக்கு ஒப்பந்தம் மறுப்பு!

மூத்த வீரர்களான சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகிய இரு வீரர்களுக்கும் ஒப்பந்தம் மறுக்கப்பட்டுள்ளது...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி: இரு மூத்த வீரர்களுக்கு ஒப்பந்தம் மறுப்பு!

இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் கோபமாக உள்ள நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுடனான கூட்டம் ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கலந்துகொண்டார். வாஷிங்டன் டிசி-யில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறந்த வீரர்களைக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைக்கான உலகின் சிறந்த அணியை உருவாக்கி வருகிறேன். என் திட்டங்கள் குறித்து இப்போது கூறமாட்டேன். என் வார்த்தைகளைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

பிறகு, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்துள்ளது. நேற்று நடைபெற்ற பிசிபி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரவும் திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில் மூத்த வீரர்களான சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகிய இரு வீரர்களுக்கும் ஒப்பந்தம் மறுக்கப்பட்டுள்ளது. 2019-20-ம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இரு வீரர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் சோயிப் மாலிக். முகமது ஹபீஸ் சமீபகாலமாக குறைவான ரன்களே எடுத்துள்ளார். எனினும் இருவரும் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் பாகிஸ்தான் அணிக்கு அவர்களைத் தேர்வு செய்ய இந்த மாற்றம் தடையாக இருக்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட்: ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள்

ஏ கிரேடு

பாபர் அஸாம், சர்பராஸ் அஹமது, யாஷிர் ஷா

பி கிரேடு

அசாத் ஷஃபிக், அஸார் அலி, ஹாரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், முகமது அப்பாஸ், சதாப் கான், ஷஹீன் ஷா அப்ரிடி, வஹாப் ரியாஸ். 

சி கிரேடு

அபித் அலி, ஹசன் அலி, ஃபகர் ஸமான், இமாத் வாசிம், முகமது அமிர், முகமது ரிஸ்வான், ஷான் மசூத், உஸ்மான் ஷின்வாரி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com