விளையாட்டு வீரர்களுக்கு தேசிய விருதுகளை தேர்வு செய்யும் குழுவில் மேரி கோம், பாய்ச்சுங் பூட்டியா
By DIN | Published On : 09th August 2019 12:43 AM | Last Updated : 09th August 2019 12:43 AM | அ+அ அ- |

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு தேசிய விருதுகளை தேர்வு செய்யும் 12 நபர் குழுவில் முன்னணி நட்சத்திரங்கள் மேரி கோம், பாய்ச்சூங் பூட்டியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
வழக்கமான மரபுகளை மீறி 12 பேர் கொண்ட ஓரே குழு விருதுகளை தேர்வு செய்யும். தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா வரும் 29-ஆம் தேதி தேசிய விளையாட்டு தினத்தன்று வழங்கப்படுகிறது. நிகழாண்டு புதிய முறையாக அனைத்து விருதுகளையும் ஓரே குழு தேர்வு செய்ய உள்ளது.
பல குழுக்கள் அமைக்கப்பட்டால்,தேவையின்றி புகார்கள் எழுகின்றன. இதனால் தற்போது ஓரே குழு மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது என மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையிலான இக்குழுவில் விளையாட்டுத் துறை செயலர் ராதே ஷியாம் ஜுலன்யா, சாய் இயக்குநர் ஜெனரல் சந்தீப் பிரதான், டாப்ஸ் சிஇஓ ராஜேஷ் ராஜகோபாலன், மேரி கோம், பாய்ச்சுங் பூட்டியா, கிரிக்கெட் முன்னாள் கேப்டன் அன்ஜூம் சோப்ரா, முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் கமலேஷ் மேத்தா உள்ளிட்டோர் உள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா முதன்மை ஆசிரியர் ராஜேஷ் கல்ரா, விளையாட்டு விமர்சகர் சாரு சர்மாவும் ஆகியோரும் உள்ளனர்.
முன்பு போல் இல்லாமல் இம்முறை ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சார்யா (பயிற்சியாளர்), தயான்சந்த் (வாழ்நாள் சாதனையாளர் விருது)) ராஷ்ட்ரிய கேல் பிரதோட்சன் விருதுகளுக்கு உரியவர்களை தேர்வு செய்யும்.
தேர்வு குழு நீண்ட தாமதத்துக்கு பின் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் குழுவின் முதல் கூட்டம் நடத்தப்பட்டு வார இறுதியில் விருதாளர்கள் அறிவிக்கப்படுவர்.