சுடச்சுட

  

  நஷ்டம் யாருக்கு என்று பார்க்கலாமா?: ஐசிசியுடன் மோதும் பிசிசிஐ!

  By எழில்  |   Published on : 09th August 2019 03:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Shashank_Manohar44

   

  2016 டி20 உலகக் கோப்பைக்கான வரிவிலக்கு விவகாரம் தொடர்பாக ஐசிசி தலைவர் ஷசாங்க் மனோகர் மீது அதிருப்தியில் உள்ளது பிசிசிஐ. 

  கடந்த 2016 இல் இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. ஆனால் அதற்கு வரிவிலக்கு எதையும் அரசு வழங்கவில்லை. இந்தியச் சட்டத்தின்படி வரித்தொகையைப் பிடித்தம் செய்து கொண்டு பிசிசிஐ, அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் டிவி உள்ளிட்டவை மீதித்தொகையை ஐசிசிக்கு செலுத்தின. மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகை வழங்கும் என ஐசிசி எதிர்பார்த்த நிலையில் எந்தச் சலுகையும் கிடைக்கவில்லை. இதனால் ஐசிசி அதிருப்தி அடைந்தது. இதனால் முழு வரிவிலக்கு பெற்றுத் தர வேண்டும் என பிசிசிஐயிடம் வற்புறுத்தியது ஐசிசி. ஆனால் இதுவரை எந்த வரித் தள்ளுபடியும் கிடைக்கவில்லை. 

  ஐசிசியின் தற்போதைய தலைவராக இந்தியாவின் ஷசாங்க் மனோகர் உள்ளார். கடந்த வருட அக்டோபரில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இழப்பீடாக ரூ.160 கோடியை பிசிசிஐ செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அத்தொகையை பிசிசிஐ திருப்பித் தரவில்லை. வரி சலுகைக்கு இந்தியா ஒப்புக் கொண்டதாக ஐசிசி கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை தனக்குவழங்க வேண்டும் என பிசிசிஐ கோரியது. ஐசிசி விவரங்களை தந்தால் மட்டுமே பணத்தை செலுத்த முடியும் எனக்கூறியது. 

  டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பிசிசிஐ அத்தொகையை செலுத்த வேண்டும். இல்லையென்றால் 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் அவற்றை வேறிடத்துக்கு மாற்றி விடுவோம் என கடந்த வருடம் ஐசிசி எச்சரித்தது.  

  இதையடுத்து வரி இழப்பை ஈடுகட்ட ஐசிசி ஆண்டு வருவாயில் பிசிசிஐக்குத் தரப்படும் பங்கைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஐசிசி உள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ சட்டபிரிவும், கிரிக்கெட் நிர்வாகக் குழு சிஓஏவிடம் எடுத்துக் கூறியுள்ளது. 2016-க்கு முன்பு நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வரிவிலக்கு தரப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லையென்றால் பிசிசிஐக்கு தரப்படும் பங்கை பிடித்தம் செய்ய வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. 2016 போட்டியின் போது தொலைக்காட்சி ஒளிபரப்பாளரான ஸ்டார் டிவி, ஐசிசி தரும் தொகையில் இருந்து 10 சதவீதம் தொகையை நிறுத்தி வைக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அதே அளவு தொகையை பிடித்தம் செய்யும் பணியில் ஐசிசி இறங்கியுள்ளது.

  இப்பிரச்னையை தீர்க்க இங்கிலாந்தில் உள்ள சட்ட அமைப்பிடம் ஆலோசனை பெற பிசிசிஐ சட்டப்பிரிவு முனைந்துள்ளது. மத்திய அரசின் வரிச்சட்டங்களை மாற்ற பிசிசிஐயால் முடியாது. இதுதொடர்பாக ஐசிசிக்கு அவ்வப்போது தெரிவித்துள்ளோம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

  இந்நிலையில் இந்தப் பிரச்னை நடைபெற்றபோது பிசிசிஐயின் தலைவராக இருந்த ஷசாங்க் மனோகர் தான் ஐசிசியின் தலைவராகத் தற்போது உள்ளார். இதன் அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்தும் அறிந்த மனோகர் இப்போது எப்படி பிசிசிஐக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளார் எனக் கேட்கிறது பிசிசிஐ. 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவுக்கு வழங்கப்படாவிட்டால் பரவாயில்லை. ஐசிசி தன் விருப்பப்படி நடவடிக்கை எடுக்கட்டும். வருமான வரித்துறை எடுக்கும் முடிவுகளின் படியே பிசிசிஐ செயல்படும். இந்தியாவுக்கு எதிராக ஐசிசி முடிவு எடுத்தால், பிறகு விளைவுகளுக்கும் அது தயாராக இருக்கவேண்டும். பிறகு வருமானம் தொடர்பான முடிவுகளை ஐசிசியிடம் இருந்து பிசிசிஐ எடுத்துக்கொள்ளும். பிறகு யார் நஷ்டத்தைச் சந்திப்பார்கள் என்று பார்க்கலாம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai