சுடச்சுட

    
    india-win


    மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இரு அணிகளுக்கு இடையில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது.
    இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 2-ஆவது ஒருநாள் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 279 ரன்கûளை குவித்தது. கேப்டன் கோலி 120, ஷிரேயஸ் ஐயர் 71 ரன்களை விளாசினர்.
    கேப்டன் விராட் கோலி தனது 42-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்து, பாக். வீரர் ஜாவித் மியான்டட்டின் 26 ஆண்டுகள் சாதனையையும் முறியடித்தார். 
    1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 68 பந்துகளில் 71 ரன்களுடன் ஷிரேயஸ் ஐயர் தனது 3-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.
     இறுதியில் 50-ஆவது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்திருந்தது இந்தியா. மே.இ.தீவுகள் தரப்பில் பிராத்வெயிட் 3-53 விக்கெட்டை வீழ்த்தினார். 280 ரன்கள் வெற்றி இலக்குடன் பின்னர் ஆடிய மே.இ தீவுகள் அணி தொடக்கத்திலே கிறிஸ் கெயில் விக்கெட்டை பறிகொடுத்தது.
    தனது 300-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்ற கெயில் 11 ரன்களுடன் புவனேஷ்வர் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். 13-ஆவது ஓவர் முடிவில் 55/2 ரன்களை எடுத்திருந்தது அந்த அணி. எவின் லெவிஸ் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஷாய் ஹோப் 5 ரன்னுடன் கலீல் அகமது பந்தில் அவுட்டானார்.
    மழையால் ஓவர்கள் குறைப்பு: ஆட்டத்தின் இடையே 2 முறை மழை குறுக்கிட்டதால், ஓவர் 46 ஆக குறைக்கப்பட்டது.  வெற்றி இலக்கு 270 ரன்களாக மே.இ.தீவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    ஷிம்ரன் ஹெட்மயர் 18, ரோஸ்டான் சேஸ் 18, கேப்டன் ஜேசன் ஹோல்டர் 13, பிராத்வெயிட் 0, கெமர் ரோச் 0, ஷெல்டன் காட்ரெல் 17, ஓஷேன் தாமஸ் 0 என நிலைத்து ஆடாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். 1 சிக்ஸர், 8 பவுண்டரியுன் 80 பந்துகளில் எவின் லெவிஸ் 65 ரன்களையும், 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் நிக்கோலஸ் பூரண் 42 ஆகியோர் அதிகபட்ச ரன்களை எடுத்து அவுட்டாயினர். 42 ஓவர்களிலேயே 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மே.இ.தீவுகள்.

    அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பை ஏற்றேன்: கோலி
    இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன் என கேப்டன் கோலி கூறியுள்ளார்.
    மே.இ.தீவுகள் அணியை டிஎல்எஸ் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. கேப்டன் கோலி 120 ரன்களையும், ஷிரேயஸ் ஐயர் 71 ரன்களையும் விளாசினர்.
    பின்னர் கேப்டன் கோலி கூறியதாவது: தவன், ரோஹித் சர்மா ஆகியோர் அவுட்டான நிலையில், அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். 270 ரன்களுக்கு மேல் ஸ்கோர் இருந்தால், அது எதிரணிக்கு சவாலானது என்பது தெரியும். தொடக்க வரிசையில் முதல் 3 வீரர்களில் ஒருவர் அதிக ரன்களை எடுக்க வேண்டும். மூத்த வீரர் என்ற நிலையில் நான் களமிறங்கினேன். பிட்ச் படிப்படியாக ஆட சிரமமாக இருந்தது. முதலில் ஆட வேண்டும் என்பதே இதற்காக தான் முடிவெடுத்தோம். பின்னர் ஆடிய மே.இ.தீவு வீரர்கள் அந்த பிட்சில் ஆட திணறினர். அவர்களது விக்கெட்டுகளை அவ்வப்போது வீழ்த்தியது உதவியாக இருந்தது. இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால், குல்தீப்பை பந்துவீசச் செய்தோம். ஷிரேயஸ் ஐயர் நம்பிக்கையுடன் ஆடி ரன்களை குவித்தார். 
    ஜேஸன் ஹோல்டர் (மே.இ.தீவுகள் கேப்டன்): நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் வெற்றி பெறாததது அதிருப்தியாக உள்ளது. ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தும் வெற்றியை நழுவ விட்டோம். பொறுப்பாக ஆட வேண்டும். ஈரப்பதமான நிலையிலும், பவுலர்கள் சிறப்பாக வீசினர். பேட்ஸ்மேன்கள் அணியை அவ்வப்போது கைவிட்டு விடுகின்றனர்.
    ஷிரேயஸ் ஐயர்: இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் ஆடியது, அணியில் தொடர்ந்து ஆடும் வாய்ப்பை தரும். ஏ அணியில் சிறப்பாக ஆடியதும், மே.இ.தீவுகள் மைதான சூழலை அறிந்து கொண்டதும் உதவியது. அணியில் நீடித்து ஆடி என்னை நிரூபிக்க விரும்புகிறேன். இணைந்து ஆட வேண்டும் என கோலி கூறினார். அதன்படி எச்சரிக்கையுடன் ஆடினேன்.

    புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்
    மே.இ.தீவுகள் சரிவுக்கு காரணமாக புவனேஷ்வர் குமார் அற்புதமாக பந்துவீசி 4-31 விக்கெட்டை சாய்த்தார். ஷமி 2-39, குல்தீப் 2-59 விக்கெட்டை வீழ்த்தினர்.
    இறுதியில் டிஎல்எஸ் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai