சுடச்சுட

  

  விளம்பரப் படப்பிடிப்புக்கு ஒத்துழைக்காத இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர்: இந்தியாவுக்குத் திரும்ப பிசிசிஐ கட்டளை!

  By எழில்  |   Published on : 14th August 2019 02:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  india_oneday1

   

  ஒழுங்கீனச் செயல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை இந்தியாவுக்குத் திரும்பும்படி பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது. 

  இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அரசின் கட்டளையின்படி நீர் சேமிப்பு தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பரம் ஒன்றில் நடிக்கவேண்டியிருந்தது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் சுனில் சுப்ரமணியத்தைத் தொடர்பு கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

  இதனால் டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூத்த அதிகாரி, சுனிலைத் தொடர்புகொண்டு இந்த விளம்பரத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டபோது, குறுஞ்செய்திகளைக் கொட்டவேண்டாம் என்று பதில் அளித்துள்ளார் சுனில். கோலி மற்றும் ரோஹித் சர்மா நடித்த நீர் சேமிப்பு விளம்பரப் படப்பிடிப்புக்குத் தேவையான ஒத்துழைப்பை சுனில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  சுனிலின் ஒழுங்கீனச் செயல் குறித்து பிசிசிஐக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தன் மீதான புகாருக்குப் பிறகு தூதரக அதிகாரிகளிடம் தன்னுடைய செயலுக்கு சுனில் வருத்தம் தெரிவித்துள்ளார். 

  எனினும் ஏற்கெனவே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உலகக் கோப்பை ஆகிய போட்டிகளின்போது சுனிலின் சில நடவடிக்கைகள் மீது பிசிசிஐக்கு அதிருப்தி இருந்துள்ளது. இதனால் தற்போதைய புகாரின் காரணமாக சிஓஏ தலைவர் வினோத் ராயின் ஆணைப்படி, சுனில் மே.இ. தொடரிலிருந்து நீக்கப்பட்டு உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு வினோத் ராயைச் சந்தித்து தன்னுடைய செயலுக்கு அவர் விளக்கம் அளிக்கும்படியும் கட்டளையிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai