சுடச்சுட

  

  இந்திய கிரிக்கெட் அணியின் பெரிய தலைவலி தீர்ந்தது: அதிரடி ஆட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஷ்ரேயஸ் ஐயர்!

  By எழில்  |   Published on : 15th August 2019 12:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shreyas_iyer_new1

   

  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-ம் நிலை வீரராகக் களமிறங்கி, 3 ஒருநாள் ஆட்டங்களில் 136 ரன்கள் எடுத்துள்ளார் 24 வயது ஷ்ரேயஸ் ஐயர். 2 அரை சதங்கள், ஸ்டிரைக் ரேட் - 124.77. இந்திய அணி எதிர்பார்த்த ஒரு வீரர் கிடைத்துவிட்டார் என்றுதான் இந்திய ரசிகர்களும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.  

  3-வது ஒருநாள் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு காரணமாக இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ரிஷப் பந்த் முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் சிக்ஸ் அடிக்க முயன்று ஆட்டமிழந்தபோது இந்திய அணி 12.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 22.2 ஓவர்களில் 163 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு ஓவருக்கு 7 ரன்களுக்கு மேல் எடுக்கவேண்டும் என்கிற நிலைமை 13-வது ஓவரிலேயே இருந்தது. ஆனால் தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார் ஷ்ரேயஸ் ஐயர். 41 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் அட்டகாசமாக விளையாடி 65 ரன்கள் எடுத்தார். 

  இந்தத் தொடரில் குறைந்தபட்சம் 50 ரன்கள் எடுத்த வீரர்களில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தான். கெயில், கோலி, லூயிஸை விடவும் அதிகம். அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஒரு சிக்ஸ் குறைவாக அடித்து ( 6 சிக்ஸர்கள்) 2-ம் இடம். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின், விராட் கோலியின் பெரிய தலைவலி ஒன்று தீர்ந்துவிட்டது. 

  இந்திய அணியில் 4-ம் நிலை வீரராக இந்தத் தொடரில் ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் 3 ஆட்டங்களில், விளையாடிய 2 இன்னிங்ஸில் மொத்தமாக 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அடுத்தமுறை ரிஷப் பந்த் 4-ம் நிலை வீரராகக் களமிறங்க மாட்டார் எனத் தெரிகிறது. அந்த வாய்ப்பு ஷ்ரேயஸ் ஐயருக்கு வழங்கப்பட்டுவிடும். விஜய் சங்கர் காயத்திலிருந்து மீண்டு வந்தாலும் இந்த முடிவு மாறாது. இதுவரை விளையாடிய 9 ஒருநாள் ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 346 ரன்கள் எடுத்துள்ளார் ஐயர். இதனால் இனிமேலும் ஐயருக்கான வாய்ப்புகள் தாமதப்படுத்தப்படாது. 

  இந்திய அணி அடுத்ததாக டிசம்பரில் இந்தியாவில் இதே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதுவரை டெஸ்ட், டி20 தொடர்களில் மட்டுமே விளையாடுகிறது. இந்தியாவில் நடைபெறவுள்ள மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் 4-ம் நிலை வீரராகக் களமிறங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம். 

  3-ம் ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு ஐயர் குறித்து கோலி கூறியதாவது: இதுபோன்ற சூழல்களில் எப்படி விளையாடவேண்டும் என்பது அவருக்குத் தெரிந்துள்ளது. இதுபோன்ற ஆட்டங்கள் அவருடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கவே செய்யும். நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வரும்போதும் இப்படித்தான் விளையாடுவேன். சூழலுக்கு ஏற்றவாறு என் ஆட்டத்தை மாற்றிக்கொள்வேன். எப்படியாவது அணிக்கு வெற்றி தேடித் தர முயல்வேன். ஐயர் மிகவும் துணிச்சலுடன் விளையாடினார். உங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தித்தான் நீங்கள் யார், உங்கள் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த முடியும் என்று பாராட்டியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai