ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா

3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மேஇ.தீவுகள் டிஎல்எஸ் முறையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா. 
ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா


3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மேஇ.தீவுகள் டிஎல்எஸ் முறையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா. 
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக 3-ஆவது ஆட்டம் புதன்கிழமை இரவு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. 
கிறிஸ் கெயில்-எவின் லெவிஸ் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கெயில் 72, லெவிஸ் 43 ரன்களை விளாசினர். மற்ற வீரர்கள் ஷாய் ஹோப் 24, ஷிம்ரன் 25, நிக்கோலஸ் பூரண் 30, ஹோல்டர் 14, பிராத்வெயிட் 16 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர்.
பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஓவர்கள் எண்ணிக்கை 35 ஆகக் குறைக்கப்பட்டது. இறுதியில் 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது மே.இ.தீவுகள்.
இந்திய தரப்பில் கலீல் அகமது 3-68, ஷமி 2-50 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
255 ரன்கள் வெற்றி இலக்கு: டிஎல்எஸ் முறையில் 255 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் தவன்-ரோஹித் களமிறங்கினர். 
ரோஹித் 10 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் தவன்-விராட் கோலி இணை ஸ்கோரை உயர்த்தினர். 5 பவுண்டரியுடன் தவன் 36 ரன்களுடன் வெளியேறினார். அவருக்கு பின் ஆட வந்த இளம் வீரர் ரிஷப் பந்த் கோல்டன் டக் அவுட்டானார். 
கோலி-ஷிரேயஸ் ஐயர் அபாரம்: அதன் பின் கோலி-ஷிரேயஸ் ஐயர் அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 4-ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 120 ரன்களை சேர்த்தனர்.
ஷிரேயஸ் ஐயர் 4-ஆவது அரைசதம்: அற்புதமாக ஆடிய ஷிரேயஸ் ஐயர் தனது 4-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். 
5 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 65 ரன்களை விளாசி ரோச் பந்தில் அவுட்டானார் ஐயர்.
கோலி 43-ஆவது சதம்: விராட் கோலி அபாரமாக ஆடி 14 பவுண்டரியுடன் 99 பந்துகளில் 114 ரன்களை எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். 
அவர் தனது 43-ஆவது ஒரு சதத்தையும் பதிவு செய்தார். 
சச்சினின் 49 சதங்கள் சாதனையை நெருங்க 6 சதங்கள் கோலிக்கு தேவைப்படுகிறது.
கேதார் ஜாதவ் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில் 32.3 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களுடன் வெற்றி பெற்றது இந்தியா.
மே,இ.தீவுகள் தரப்பில் பேபியன் ஆலன் 2-40 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
இதன் மூலம் 2-0 என ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா. ஏற்கெனவே டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது. 

மிடில் ஆர்டரில் ஷிரேயஸ் ஐயர் நிரந்தரமாக ஆட வாய்ப்பு: விராட் கோலி
அழுத்தமான சூழ்நிலையில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் ஷிரேயஸ் ஐயர் நிரந்தரமாக ஆடுவார் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
மே.இ.தீவுகளுடன் 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. கேப்டன் கோலி 114, ஷிரேயஸ் ஐயர் 65 ரன்களுடன் வெற்றிக்கு வித்திட்டனர். 2-ஆவது ஒருநாள் ஆட்டத்திலும் ஐயர் 71 ரன்களை விளாசி இருந்தார். இந்நிலையில் கோலி கூறியதாவது: 
இரு ஆட்டங்களிலும் என்னுடன் இணைந்து ஆடினார் ஷிரேயஸ். வெற்றியில் பெரிய பங்கு அவருக்குள்ளது. மிகவும் நம்பிக்கையுடன் ஆட்டத்தை எதிர்கொண்ட அவர், எதற்கும் பயப்படாமல் ஆடினார். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஐயர்.
இதே போல் அவர் ஆடினால், மிடில் ஆர்டரில் நிரந்தர இடத்தை பெறலாம். 3-ஆவது ஆட்டத்தில் சிறிது நிர்பந்தமான சூழலில் நாம் ஆடிய போது, ஷிரேயஸ் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். நாம் யார், எந்த வகையிலான ஆட்டக்காரர் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இரண்டு ஆட்டங்களிலும் அழுத்தத்தை எதிர்கொள்ள எனது அனுபவம் உதவியது. தவன்-ரோஹித் சொதப்பினால், ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பு என்னிடம் வருகிறது. 
மே.இ.தீவுகள் வீரர்கள் கிறிஸ் கெயில்-எவின் லெவிஸ் அதிரடியாக ஆடிய போது எங்களுக்கு சிறிது பதற்றம் எழுந்தது.

சிறந்த மனிதர் கிறிஸ் கெயில்: கிறிஸ் கெயில் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தில் பங்கேற்றார் எனக் கருதப்பட்ட நிலையில், அவர் சிறந்த மனிதநேயம் மிக்கவர் என கோலி பாராட்டினார். 
சிறந்த அடையாளமாகவும், இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் உள்ளார். மே.இ.தீவுகள் அணிக்காக மிகவும் பாடுபட்டுள்ளார். கடினமான சூழலிலும் புன்னகையுடன் இருப்பவர். என்னுடன் பெங்களூரு அணியில் விளையாடிய நெருங்கிய நண்பர்.

ஓய்வு பெறுவதாகஅறிவிக்கவில்லை: கிறிஸ் கெயில்ஒருநாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் அறிவிக்கவில்லை என கெயில் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நடைபெற்ற 3-ஆவது ஒருநாள் ஆட்டமே அவரது கடைசி ஆட்டம் எனக் கருதப்பட்டது. இது எனது பிரிவுபசார ஆட்டமில்லை. நான் ஓய்வு முடிவை அறிவிக்கவே இல்லை. அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து ஆடுவேன். 103 டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி ஓய்வு பெற்ற அவர்,ஐசிசி உலகக் கோப்பையே தனது கடைசி ஒருநாள் போட்டி என அறிவித்தார். பின்னர் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டார். கிறிஸ் கெயிலின் சேவை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு தேவை என கேப்டன் ஹோல்டர் கூறியுள்ளார்.

கடினமான சூழலில் பேட்டிங் செய்ய விருப்பம் 
கடினமான சூழலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறேன் என இளம் வீரர் ஷிரேயஸ் ஐயர் கூறியுள்ளார். 
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அணியின் கடினமான சூழலில் பேட்டிங் செய்து ரன்களை குவிக்கவே விரும்புகிறேன், இதன் மூலம் ஆட்டத்தின் தன்மையை மாற்றலாம் என்றார் ஐயர்.

10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை குவித்த முதல் வீரர் கோலி
10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் மொத்தம் 20,502 ரன்களை குவித்துள்ள கோலி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே 20, 018 ரன்களை குவித்துள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 43-ஆவது சதம் அடித்த போது இச்சிறப்பை பெற்றார் கோலி. 
கடந்த 2010-இல் டெஸ்ட் மற்றும் டி20 ஆட்டங்களில் அறிமுகமானார் கோலி. கடந்த 2008-இல் ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமான அவர் அதற்கு முன்பே 484 ரன்களை எடுத்திருந்தார்.
ரிக்கி பாண்டிங் 18,962
கடந்த 2000-ஆம் ஆண்டில் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் 18,962 ரன்களை விளாசி இருந்தார். தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜேக் காலிஸ் 16,777 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இலங்கை ஜாம்பவான்கள் ஜெயவர்த்தனா 16,304, குமார் சங்ககரா 15,999 ரன்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.
சச்சின் 15,962, திராவிட் 15,853 ரன்களுடன் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com