நாளை தொடங்குகிறது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக தங்கம் வெல்லுமா இந்தியா?

நமது நாட்டில் பாட்மிண்டன் போட்டி கிரிக்கெட்டைப் போல் மிகவும் பிரபலமாகி வரும் ஒரு விளையாட்டுப் போட்டியாக திகழ்ந்து வருகிறது.
நாளை தொடங்குகிறது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக தங்கம் வெல்லுமா இந்தியா?

நமது நாட்டில் பாட்மிண்டன் போட்டி கிரிக்கெட்டைப் போல் மிகவும் பிரபலமாகி வரும் ஒரு விளையாட்டுப் போட்டியாக திகழ்ந்து வருகிறது. பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்களின் எழுச்சியால் சிறார்களின் மனதில் பாட்மிண்டன் குறித்த கனவு மேலும் பெரிதாகி வருகிறது.
பாட்மிண்டனில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று பாட்மிண்டனில் தங்கப்பதக்கம் வெல்வது ஒவ்வொரு வீரர், வீராங்கனையின் உச்சபட்ச கனவாக இருக்கும்.
இதற்கு அடுத்தபடியாக மிகவும் புகழ் வாய்ந்ததாகத் திகழும் பாட்மிண்டன் போட்டி, உலக சாம்பியன்ஷிப் ஆகும்.
ஒலிம்பிக் போட்டி நடைபெறாத ஆண்டைத் தவிர, ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்றுவரும் மிக முக்கியமான போட்டி இதுவாகும்.
இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஆக.19-இல் தொடங்கி 25ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.
1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில்,   இந்தியாவில் இருந்து முதல் முறையாக பதக்கம் வென்றவர் முன்னாள் வீரர் பிரகாஷ் படுகோன் ஆவார்.
டென்மார்க்கில் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இவர் வெண்கலம் வென்று மூன்றாவது இடம் பிடித்தார். அதன் பிறகு மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-ஜுவாலா கட்டா இணை, 2011-ஆம் ஆண்டில் லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றது.
2013ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2014இல் டென்மார்க்கில் நடைபெற்ற போட்டியிலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்.
2017, 2018ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை சென்ற சிந்துவால் வெள்ளிப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தெற்காசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் தங்கம் வென்றுள்ள பி.வி.சிந்து, உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும், ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார்.
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை
யில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3ஆம் இடத்தில் இருக்கும் சிந்து, இந்த முறை தங்கப் பதக்கத்தை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளதால், இந்த வெற்றி அவருக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். இவருக்கு ஜப்பான் வீராங்கனை யமாகுச்சி கடும் சவால் அளிப்பார்.
ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரீன், காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான சாய்னா நெவால், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் மற்றொரு இந்திய வீராங்கனையாவார். இந்தியா சார்பில் 3 முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்றுள்ள சாய்னா, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார்.
தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள சாய்னா, தற்போது நல்ல உடல் தகுதியுடன் உள்ளார். கடந்த ஆண்டு கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்புப் பிரிவு ஆகியவற்றில் தங்கம் வென்று சாதனை படைத்ததே இதற்கு சாட்சி.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாய்னா, 2017-இல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலம் வென்று ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார்.
ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்த சாய்னா, 29 வயதிலும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தன்னால் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்க முடிவு செய்துள்ளார். அவருக்கு தங்கப் பதக்கம் பரிசாக கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
 தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் உள்ள தைவான் வீராங்கனை தாய் ஸூ யிங்கும், 2017-இல் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவும் இந்தப் போட்டியில் இடம்பெற்றுள்ளதால், வீராங்கனைகளுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சர்வதேச அளவில் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த்,  தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள ஹெச்.எஸ்.பிரணாய், சமீர் வர்மா, சாய் பிரணீத் ஆகியோரும் இந்தியா சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் உள்ளவரும், 2017-இல் சாம்பியன் பட்டம் வென்றவருமான டென்மார்க் வீரர் விக்டர் ஆக்ஸல்சென், காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.
எனினும், கடந்த ஆண்டு ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீரர் கென்டோ மொமோடா இந்த முறையும் பங்கேற்கிறார் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.
சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட "சூப்பர் 500' போட்டியில், இந்தியா சார்பில் முதல்முறையாக ஆடவர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சிராங் ஷெட்டி-ரங்கிரெட்டி இணை, காயம் காரணமாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டது. இந்த இணை இரட்டையர் பிரிவில் தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ளது.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை களமிறங்குகிறது.
இந்த முறையாவது இந்தியா தங்கம் வெல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com