நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்துக்கு மோதும் ஷிரேயஸ் ஐயர்-ரிஷப் பந்த்
By DIN | Published On : 19th August 2019 01:17 AM | Last Updated : 19th August 2019 01:17 AM | அ+அ அ- |

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான நான்காம் நம்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு இளம் வீரர்கள் ரிஷப் பந்த்-ஷிரேயஸ் ஐயர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூஸிலாந்துடன் தோல்வியடைந்து வெளியேறியது. தொடக்க வரிசை வீரர்களான ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோரில் யாராவது ஒருவர் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.
தொடக்க வரிசை சொதப்பலால் பாதிப்பு:
மூவரும் அவுட்டானால் நான்காம் நிலை பேட்ஸ்மேன் மீது அச்சுமை விழுகிறது. உலகக் கோப்பையில் லோகேஷ் ராகுல், ஆடினார். பின்னர் ஷிகர் தவன் காயமடைந்ததால், ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், விஜய் சங்கர், கேதார் ஜாதவ் ஆகியோர் நான்காம் நிலையில் களமிறக்கப்பட்டனர். இதில் ரிஷப் பந்த் மட்டுமே சோபித்தார்.
ஆல் ரவுண்டர்களான விஜய் சங்கர், கேதார் ஜாதவ் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. மூத்த வீரர் தோனி 5-ஆவது இடத்தில் ஆடினார்.
இதற்கிடையே மே.இ.தீவுகளில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. டி20, ஒருநாள் தொடர்களை இந்தியா கைப்பற்றி விட்டது. ஒரு நாள் தொடரில் 2 ஆட்டங்களில் தொடக்க வீரர்கள் ரோஹித்-தவன் ஆகியோர் சொதப்பிய நிலையில், மூன்றாம் நிலையில் களமிறங்கிய கேப்டன் கோலி தான் அணியை சரிவில் இருந்து மீட்டார். நான்காம் நிலையில் களமிறங்கிய ரிஷப் பந்த் சரியாக ஆடாத நிலையில், 5-ஆம் நிலையில் ஆடிய ஷிரேயஸ் ஐயர் 2 அரைசதங்களை அடித்தார்.
வரும் 2020 டி20 உலகக் கோப்பை, 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போன்றவற்றுக்கு அணியை தயார் செய்யும் பணி உள்ளது.
நான்காம் நிலையில் நிரந்தரமாக ஆடப் போவது ரிஷப் பந்த்தா இல்லை ஷிரேயஸ் ஐயரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தோனிக்கு பதிலாக முழு நேர விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தயாராகி வருகிறார்.
ரிஷப் பந்த்: 21 வயது இளம் வீரரான பந்த், 9 டெஸ்ட்களில் 696 ரன்களும், 12 ஒரு நாள் ஆட்டங்களில் 229 ரன்களும், 18 டி20 ஆட்டங்களில் 302 ரன்களையும் குவித்துள்ளார். 2018 அக்டோபரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார் ரிஷப் பந்த். ஐபிஎல் அணியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் ஆடி வருகிறார்.
ஷிரேயஸ் ஐயர்: 24 வயது இளம் வீரரான ஷிரேயஸ் ஐயர், மும்பையைச் சேர்ந்தவர். 9 ஒருநாள் ஆட்டங்களில் 346 ரன்களையும், 6 டி20 ஆட்டங்களில் 83 ரன்களையும் சேர்த்துள்ளார். 2017-இல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் நியூஸிலாந்துக்கு எதிராக டி20 ஆட்டத்திலும் அறிமுகமானார்.
கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆதரவு: ஏற்கெனவே ஜாம்பவான் கவாஸ்கரும் நான்காம் நிலை இடத்துக்கு ஷிரேயஸ் ஐயரை பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு ஏற்றுள்ள ரவி சாஸ்திரியும் பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில் ஷிரேயஸ் ஐயர் பெயரை கூறியுள்ளார். வழக்கமான தோனி இறங்கும் 5-ஆம் இடத்தில் ரிஷப் பந்த்தும், 4-ஆம் இடத்தில் ஷிரேயஸ் ஐயரும் நிரந்தரமாக களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.