புரோ கபடி லீக் போட்டிகளில் அசத்தும் தமிழக பெண் நடுவர்

நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள புரோ கபடி லீக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் எம்.கே.சந்தியா நடுவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 
புரோ கபடி லீக் போட்டிகளில் அசத்தும் தமிழக பெண் நடுவர்


நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள புரோ கபடி லீக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் எம்.கே.சந்தியா நடுவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 
இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடிக்கு கிரிக்கெட்டுக்கு பின் நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆசியப் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வென்று வந்த இந்திய அணி கடந்த 2018 ஜகார்த்தா போட்டியில் தான் முதன்முறையாக தங்கத்தை இழந்தது. 
ஆடவர், மகளிர் உள்ளிட்ட 2 அணிகளும் உலகக் கோப்பை பட்டத்தையும் வென்றுள்ளது. தற்போது ஈரான், கொரியா, ஜப்பான், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், உள்பட பல நாடுகளில் கபடி பிரபலமாகி வருகிறது. பள்ளி, கல்லூரி மட்டங்களிலும் தவறாமல் கபடி ஆடப்படுகிறது.
இந்தியாவில் கபடிக்கு மேலும் ஊக்கத்தை தரும் வகையில் ஐபிஎல் போன்று பிகேஎல், புரோ கபடி லீக் போட்டிகள் 6 சீசன்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டுள்ள இப்போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் 12 நகரங்களில் நடக்கின்றன. பின்னர் பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் நடத்தப்படுகிறது. 
முற்றிலும் நவீன வசதிகளுடன் உள் விளையாட்டரங்குகளில் லீக் போட்டிகள் நடக்கின்றன. புரோ கபடி போட்டியால் வீரர்கள், பயிற்சியாளர்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் சிறப்பாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்கக்தது.
பெண் நடுவர்கள் பங்கேற்பு: முற்றிலும் ஆடவர் அணிகளே கலந்து கொள்ளும் இப்போட்டியில் ஏராளமான பெண் நடுவர்களும் பங்கேற்கின்றனர்.  
பொதுவாக விளையாட்டுகளில் பெண் நடுவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இடம் பெறுவது வழக்கம். ஆண் நடுவர்களே வழக்கமாக கபடி ஆட்டங்களில் பங்கேற்று நடத்துவர். ஆனால் இதை புரோ கபடி முற்றிலும் மாற்றியுள்ளது. இந்தியா முழுவதும் 8-க்கு மேற்பட்ட பெண்கள் நடுவர்களாக செயல்படுகின்றனர். இதனால் பெண் பார்வையாளர்களும் அதிகளவில் ஈர்க்கப்பட்டு போட்டிகளை காண வருகின்றனர். 
தமிழக இளம்பெண் சந்தியா: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெரிய புதூரைச் சேர்ந்த எம்.கே.சந்தியா (29). தமிழகத்தின் மகளிர் சீனியர் கபடி அணியில் பங்கேற்று ஆடியவர். வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழக அணியிலும் இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த 2018 முதல் 2 ஆண்டுகளாக பிகேஎல் போட்டிகளில் நடுவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பரபரப்பான தருணங்கள் நிறைந்த கபடி ஆட்டத்தை பொறுமையாக கையாள்வதில் வெற்றி பெற்றுள்ளார் சந்தியா. வேலூர் ஸ்பிரிங்டேஸ் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் சந்தியா.
தனது நடுவர் பணி குறித்து சந்தியா கூறியதாவது: 
காட்பாடி அரசு மகளிர் பள்ளியில் படித்த போது, 9-ஆம் வகுப்பில் கபடி ஆடத் தொடங்கினேன். 2007-இல் சப்-ஜூனியர் தேசிய போட்டியில் ஆடிய நான், அடுத்த 2008-இலேயே சீனியர் தேசிய போட்டியில் ஆட தகுதி பெற்றேன். 2015-இல் தேசிய சீனியர் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி வரை தமிழகம் முன்னேறியது. சிறுவயதிலேயே தந்தை காலமானதால் எனது தாயார் கோட்டீஸ்வரி தான் சிரமப்பட்டு எங்களை வளர்த்தார்.
2018-இல் நடுவராக தேர்வு: எனக்கு 4 சகோதரிகள். அனைவருமே கபடி வீராங்கனைகள் தான். அதே போல் எனது கணவர் கதிரவனும் கபடி வீரர் ஆவார். இதனால் எனது கபடி வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லை. திருமணமாகி தொடர்ந்து ஆட முடியாததால், நடுவர் பணிக்கான தேர்வில் கலந்து கொண்டு எழுதினேன்.
மும்பையில் எங்களுக்கு புரோ கபடி குறித்து பயிற்சி தரப்பட்டது. தமிழகத்தில் இருந்து 2 பெண்கள், 4 ஆண்கள் கலந்து கொண்டோம்.
தொடர்ந்து 2 சீசன்களாக போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டு வருகின்றேன்.  ஹைதராபாத், பாட்னா, ஆமதாபாத், மும்பை, நொய்டா, பஞ்ச்குலா உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பிகேஎல் போட்டிகளில் நடுவராக செயல்பட்டுள்ளேன்.
நாள்தோறும் எங்களுக்கும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி நடைபெறும். அவ்வப்போது நடுவர்களுக்கான செயலரங்குகளும் நடத்தப்படும்.
சர்வதேச நடுவராக மாற விருப்பம்: தற்போது தேசிய நடுவராக செயல்பட்டு வரும் எனக்கு, விரைவில் சர்வதேச நடுவராக தேர்ச்சி பெற வேண்டும் என்பதே நோக்கம் ஆகும்.
தமிழக கபடி சங்க நிர்வாகிகள் தேவையான ஊக்கத்தை  தந்து வருகின்றனர் என்றார் சந்தியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com