கடைசி விக்கெட்டுக்கு 76 ரன்கள்.. 1 விக்கெட் வித்தியாசத்தில் 'த்ரில்' வெற்றி: மீண்டும் வரலாறு படைத்தார் ஸ்டோக்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸின் அசத்தலான சதத்தால் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸின் அசத்தலான சதத்தால் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3-வது ஆஷஸ் டெஸ்ட் ஆட்டம் ஹெடிங்ளே மைதானத்தில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 67 ரன்களுக்கு சுருண்டது. இதனால், வலுவான 112 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. அதில், 246 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும், ஜோ ரூட் மற்றும் ஜோ டென்லி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையளித்தனர். அரைசதம் அடித்த டென்லி சரியாக 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்திருந்தது. ரூட் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இந்நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் வெறும் 2 ரன்களை மட்டுமே கூடுதலாக எடுத்த ரூட் 77 ரன்களுக்கு லயான் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, மீண்டும் ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப் அமைத்து ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியளித்தனர். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்களைக் கடந்து பயணிக்க, இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை அடைந்துவிடும் என்கிற நம்பிக்கை அதிகரித்தது. 

இந்தச் சூழலில், பேர்ஸ்டோவ் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பட்லர் மற்றும் வோக்ஸ் தலா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க ஆட்டத்தில் மீண்டும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடங்கியது. 

இதன்பிறகு, அரைசதம் அடித்த ஸ்டோக்ஸுக்கு ஆர்ச்சர் ஓரளவு ஒத்துழைத்து விளையாடினார். ஆனால், 15 ரன்கள் எடுத்த ஆர்ச்சரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் லயான் சுழலில் வீழ்ந்தார். 8-வது விக்கெட்டுக்கு இந்த இணை 25 ரன்கள் சேர்த்தாலும் இந்த கட்டத்தில் இது முக்கியமான ரன்களாக அது அமைந்தது. அடுத்து களமிறங்கிய பிராட்டும் 2-வது பந்திலேயே ஆட்டமிழந்தார். 

9 விக்கெட்டுகள் இழந்ததால் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்தது. 

எனினும், விடாமுயற்சியோடு போராடிய பென் ஸ்டோக்ஸ் வெற்றியை நோக்கி விளையாடினார். 9-வது விக்கெட் விழும்போது இங்கிலாந்து வெற்றிக்கு 73 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் 174 பந்துகளில் 61 ரன்களுடன் களத்தில் இருந்தார்.  

கடைசி விக்கெட் என்பதால், ஸ்டோக்ஸ் சிக்ஸரிலும் பவுண்டரிகளிலும் ரன் குவிக்கத் தொடங்கினார். ஸ்டிரைக்கையும் பெரும்பாலாக தன்னிடமே வைத்துக்கொண்டார். கம்மின்ஸ், ஹேசில்வுட், லயான் என பந்துவீச்சாளர்களை மாற்றியும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினுக்கு எந்தப் பலனும் அளிக்கவில்லை. அனைத்து பந்துவீச்சாளர்களையும் சிதறடித்த ஸ்டோக்ஸ் வெறும் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 8-வது சதத்தையும் அவர் பூர்த்தி செய்தார். 

ஒரு ஓவருக்கு ஒரு சிக்ஸர் என்ற கணக்கில் விளையாடி வந்த அவர் ஹேசில்வுட் வீசிய ஒரு ஓவரில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர் அடிக்க அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தது. இதன்மூலம், இங்கிலாந்து வெற்றிக்குத் தேவையான ரன்கள் 18 ஆக குறைந்தது. மறுபுறம் ஜேக் லீச் பந்துகளை மட்டும் எதிர்கொண்டு ரன் குவிக்காமல் பாட்னர்ஷிப் அமைத்தார்.

அதன்பிறகு, கம்மின்ஸ் ஓவரில் 2 பவுண்டரி, லயான் ஓவரில் 1 சிக்ஸர் அடிக்க இங்கிலாந்து வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதன்பிறகு, கம்மின்ஸ் ஓவரில் தனது 17-வது பந்தில் முதல் ரன்னை எடுத்த லீச், ஆட்டத்தை டை ஆக்கினார். அடுத்த பந்திலேயே ஸ்டோக்ஸ் பவுண்டரி அடித்து வரலாறு படைத்தார்.

இதன்மூலம், இங்கிலாந்து அணி 1 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டோக்ஸ் 135 ரன்கள் எடுத்தார். அதில், 11 பவுண்டரி, 8 சிக்ஸர் அடங்கும். கடைசி விக்கெட்டுக்கு இந்த இணை 62 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தது. இதில், பென் ஸ்டோக்ஸ் மட்டும் 45 பந்துகளில் 74 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த வெற்றியின் மூலம்,  இன்னும் இரண்டு ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் ஆஷஸ் தொடர் 1-1 என சமநிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அதேசமயம், இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச சேஸிங் என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது. இதற்கு முன் 1928-இல் 332 ரன்களை சேஸ் செய்திருந்ததே சாதனையாக இருந்தது. 

ஆட்டநாயகன் விருதை ஸ்டோக்ஸ் தட்டிச் சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com