மின்னும் தங்கம்!

சிந்துவின் சாதனைகளுக்குப் பின்னால் அவரது பயிற்சியாளர் கோபிசந்த், சிந்துவின் பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது...
மின்னும் தங்கம்!

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதல் எட்டு வீரர், வீராங்கனைகள் மோதும் 'வேர்ல்ட் டூர் இறுதித் தொடர்' போட்டியில் கடந்த வருடம் தங்கம் வென்றார் சிந்து. பல இறுதிச் சுற்றுத் தோல்விகளுக்குப் பிறகு கிடைத்த வெற்றி அது.

‘இந்த வெற்றியை மறக்க முடியாது. ஏன் இறுதிச் சுற்றில் வெற்றி பெறவில்லை என்ற கேள்வியை எதிர் கொள்ளும் சந்தர்ப்பம் இந்தமுறை இல்லை. அதுவே பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. ஏன் இறுதிச் சுற்றில் வெற்றி பெறவில்லை என்ற கேள்வியை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் இனி வராது என்று நம்புகிறேன். இந்த இறுதி போட்டியின் போது நான் முன்னணியில் இருந்தாலும், கடந்த கால இறுதி போட்டிகளில் நான் வெற்றியை இழந்தது என் கண் முன் வந்து போனது. நான் சுதாரித்துக்கொண்டு அந்த எண்ணங்களை விரட்டி அடித்தேன். ஆட்டத்தில் கவனத்தைக் குவித்தேன். அதனால் புள்ளிகளை என் கணக்கில் கூட்ட முடிந்தது. இந்தப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் ஏழு இடத்தில் இருக்கும் எல்லா வீராங்கனைகளையும் வென்றுள்ளேன். இந்தத் தொடரில் ஓர் ஆட்டத்தில் கூட நான் தோல்வியடையவில்லை.’ என்று சொன்ன சிந்து, இந்த வருடம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த இரண்டு தங்கப் பதக்கங்கள் தவிர கொரியா, இந்தியா சீனா ஓபன் போட்டிகளிலும் சிந்து தங்கம் வென்றுள்ளார்.

2016 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்து அதற்குப் பிறகு பல வெற்றி தோல்விகளை சந்தித்து வந்திருக்கிறார். அண்மையில் பல போட்டிகளில் கரோலினா, ஒகுஹராவிடம் பல சந்தர்ப்பங்களில் தோற்றிருப்பதால் இன்னும் பயிற்சி தேவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளார். எனவே முன்பை விடவும் கடுமையாகப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். தோல்விகளினால் அவர் பல விமரிசனங்களை எதிர்கொண்டுள்ளார்.

"தங்கம் மட்டும் மின்னும் என்று சொல்ல முடியாது. வெள்ளியும் மின்னும். நான் தங்கப் பதக்கத்தை தவற விட்டுள்ளேன். ஆனால் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறேன். எனது வெள்ளிப் பதக்கமும் மின்னத்தான் செய்கிறது. தங்கப் பதக்கத்தை பெறுகிற வரையில் ஓயமாட்டேன். விடாமல் தொடர்ந்து முயல்வேன்" என்று உறுதியுடன் சொல்லிவந்தார் சிந்து. அதை ஒகுஹராவை இரண்டு முறை தோற்கடித்து நிறைவேற்றியுள்ளார்.

சக போட்டியாளர் சாய்னா நெவால் திருமணம் செய்துகொண்டுவிட்டார். திருமணம் குறித்து சிந்திக்கத் தொடங்கியாச்சா என்கிற கேள்விக்கு, "இப்போதைக்கு திருமணம் பற்றி யோசிக்கவேயில்லை. இன்னும் காலம், நேரம் இருக்கிறது. திருமணத்திற்கு முன்பு சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது" என்ற சிந்துவின் நிலை ஒலிம்பிக்ஸ் வரை தொடரும். ஏனென்றால் சிந்துவுக்கு இப்போது 24 வயதுதான் ஆகிறது.

இந்த இமாலய வெற்றிகள் சாதாரணமாக வந்ததில்லை.

சிந்துவின் சாதனைகளுக்குப் பின்னால் அவரது பயிற்சியாளர் கோபிசந்த், சிந்துவின் பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது.

2005-ல், கோபிசந்தின் மாணவியாகச் சேர்ந்தபோது சிந்துவுக்கு வயது பத்து. ஞாயிறு நீங்கலாகத் தினமும் அதிகாலை நான்கு மணிக்குப் பயிற்சிக்குத் தயாராக வேண்டும். சிந்துவின் பாதுகாப்புக்கு, துணைக்கு, உதவிக்கு நிழலாகப் போய் வருபவர், சிந்துவின் அப்பா பி. வி. ரமணா. கணவரையும் மகளையும் அனுப்பி வைக்க சிந்துவின் அம்மா விஜயாவும் அதிகாலையிலேயே கண் விழித்தால்தானே வீட்டில் காரியங்கள் நடக்கும்!

தந்தை ரமணா கைப்பந்து ஆட்ட வீரர். அர்ஜுனா விருது பெற்றவர். சிந்துவின் தாய் விஜயாவும் கைப்பந்து வீராங்கனை. ரமணாவும் விஜயாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். வீட்டை, சிந்துவைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக பணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றவர் விஜயா.

"நான் தீவிர கைப்பந்தாட்டக்காரனாக இருந்தபோது, கைப்பந்தாட்டத்தில் பயிற்சி பெற வரும் சமயங்களில் என் மகளான எட்டு வயது சிந்துவையும் உடன் அழைத்து வருவேன். நான் விளையாடுவதைப் பார்க்காமல், பக்கத்தில்  நடக்கும் பாட்மிண்டன் விளையாட்டைப் பார்த்தபடி நிற்பாள். அவளது விருப்பம் என்ன என்று தெரிந்ததும், அந்த ஆட்டத்தில்  விளையாடச் செய்தோம். மெஹபூப் அலி என்ற பயிற்சியாளரிடம் சிந்துவைச் சேர்த்தேன். இரண்டு ஆண்டுகளில் பாட்மிண்டன் ஆட்டத்தின் அடிப்படைகளை சிந்து கற்றுக்கொண்டாள்" என்கிறார் ரமணா.

பயிற்சி நிலையத்தில், பயிற்சி தர அதிகாலை நாலரை மணிக்கு கோபிசந்த் ரெடியாக இருப்பார். மற்றவர்கள் ஆழ்ந்து உறங்கும்போது ஒரு லட்சியத்துக்காக அதிகாலை நான்கு மணிக்குத் தினமும் கண் விழித்தார் சிந்து. அந்த உழைப்பில் ஒரு உண்மை இருந்தது, சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் இருந்தது, ஒரு யாகம்... இத்தனை ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி நடந்து வந்துள்ளது. அந்த யாகம்தான், ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கத்தை சிந்துவுக்கு வாங்கித் தந்திருக்கிறது. அதனால்தான், ஒலிம்பிக்ஸ் வெள்ளிப் பதக்கத்தை தனது பயிற்சியாளர், பெற்றோர்களுக்குச் சமர்ப்பணம் செய்தார் சிந்து. இப்போது கிடைத்த தங்கப் பதக்கத்தைத் தனது அம்மாவுக்குப் பிறந்தநாள் பரிசாக அறிவித்திருக்கிறார்.

ரமணா தம்பதியர் சிந்துவுக்காகப் பட்ட சிரமங்களை, சரீர உபாதைகளை, மன உளைச்சல்களை வெளியில் சொன்னதில்லை. ஆனால் இந்தத் தியாகத்தை அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், குடும்பத்தினர் அறிவார்கள்.

அப்போது செகந்திராபாத் பக்கம் குடியிருந்தார் ரமணா. பயிற்சியாளர் கோபிசந்தின் அகாடமி இருப்பதோ ஹைதராபாத்தில் உள்ள கச்சிபௌலி பகுதி. ரமணாவின் வீட்டிலிருந்து சுமார் இருபத்தைந்து கி. மீ. தூரம். ஆரம்ப காலத்தில் அதிகாலை, மாலை நேரங்களில் பயிற்சி. தினமும் நூறு கி. மீ. பயணம்.

“தொடக்கத்திலிருந்தே சிந்துவின் வாழ்க்கை அட்டவணை தீர்மானிக்கப் பட்டுவிட்டது. அன்றும் சரி.. இன்றும் சரி... பல காலகட்டங்களில் அவள் வயதில் இருக்கும் பெண் பிள்ளைகள் செய்ததை, அனுபவித்ததை சிந்துவால் செய்ய முடியவில்லை. பயிற்சியில் சிந்துவின் கவனம் மட்டுமல்ல.. எங்கள் கவனமும் குவிக்கப்பட்டிருந்ததால் பாட்மிண்டனைத் தவிர வேறு எதுவும் எங்கள் சிந்தனையில் இல்லை. தெரிந்தவர்கள், "சிந்து என்ன செய்கிறாள்" என்று கேட்பார்கள். "பாட்மிண்டன் பயிற்சியில் ஈடுபடுகிறாள்" என்று பதில் சொல்வோம். அந்தப் பதில் கேள்வி கேட்டவரைத் திருப்திப்படுத்தாது. "என்ன பாட்மிண்டன்? என்ன பயிற்சி..." என்று சலித்துக் கொள்ளும் பாவம்தான் அவர்கள் முகத்தில் தெரியும். "புரிந்து கொள்ளமாட்டேன்கிறார்களே.." என்று எங்களுக்கு வருத்தம் வருத்தமாக இருக்கும். ஆனால் நாங்கள் அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிந்துவின் ஆர்வத்திற்கு ஆதரவாக என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்துவந்தோம்" என்கிறார் சிந்துவின் அம்மா விஜயா.

சிந்துவின் உயரம் ஐந்தடி பதினோரு அங்குலம். அவரது கைகள், கழுத்து, தோள்பட்டை, கால்கள் உறுதி ஏற பிரத்யேகப் பயிற்சிகளை நிபுணர்களைக் கொண்டு கொடுத்துள்ளார் கோபிசந்த். எடை கூடாமல் இருக்கவும் உணவு நிபுணரின் கண்காணிப்பு உண்டு.

சிந்துவுக்கு அவரது உயரம் பலம். அதே சமயம் அவரது பலவீனமும்கூட. "தாழ்ந்துவரும் பந்தைக் குனிந்து எடுப்பதில் நான் சிரமத்தை உணருகிறேன்" என்கிறார் சிந்து. அந்தச் சிரமம், அவருடைய பல ஆட்டங்களில் வெளிப்படையாகத் தெரியும்.

2016-ல் பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடரில் பங்கு பெற்ற விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரனுக்குச் சொந்தமான 'சென்னை ஸ்மேஷர்ஸ்’ அணியில் சிந்து இடம்பெற்றார். 2016 முதல் கடந்த வருடம் வரை அந்த அணிக்காகத் தொடர்ந்து விளையாடினார்.

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் பி. வி. சிந்து கைப்பந்தாட்டத்திற்கு விளம்பரத் தூதுவராக மாறியுள்ளார். ஏன்?

"அப்பா அம்மாவுக்கு பிடித்த விளையாட்டு கைப்பந்தாட்டம். அவர்கள் கைப்பந்தாட்டம் விளையாடியதைப் பார்த்து வளர்ந்தவள் நான். அப்பா ஆசிய போட்டியில் பதக்கம் பெற்றவர். இந்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றவர். அப்பா விளையாடும் போது என்னையும் அழைத்துச் செல்வார். அதனால் கைப்பந்தாட்ட விதிமுறைகள், விளையாடும் லாகவம் குறித்து எனக்குத் தெரியும். அப்பா, அம்மா விளையாடுவதைக் கண்டு தான் நான் பாட்மிண்டன் பக்கம் வந்தேன். கைப்பந்தாட்டத்திற்கும் பாட்மிண்டனுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்தியாவில் விளையாட்டுத் துறை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா வகை விளையாட்டுகளிலும் இடம் பெற ஆர்வமுடன் இளைய தலைமுறை வருகிறது. இது கைப்பந்தாட்டத்திற்கும் பொருந்தும். அப்பா காலத்து கைப்பந்தாட்ட நிலைமை இப்போது இல்லை. இந்த மாற்றங்களால் பல மாநில வீரர்கள் ஒன்றாக விளையாடும் சந்தர்ப்பம் உண்டாகும். புரிதலும் உண்டாகும். தேசிய ஒற்றுமைக்கும் இது ஒரு தளமாக அமையும்" என்கிறார் சிந்து.

கோலிக்கு அடுத்தபடியாக விளம்பரத்திற்கு ஊதியம் அதிகம் வாங்குவது சிந்துதான். ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கோடி வரை சம்பளம் பெறுகிறார். பாட்மிண்டன் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து முன்னேறியுள்ளதால் விளம்பரங்களில் நடிப்பதற்கான சிந்துவின் சம்பளமும் உயர்ந்துவிட்டது. உலக சாம்பியன் ஆகியுள்ளதால் சிந்துவின் ஊதியம் இன்னும் அதிகமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com