பிரையன் லாராவின் 400* சாதனையை ரோஹித் சர்மா முறியடிக்கலாம்: டேவிட் வார்னர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை (400 ரன்கள்) எடுத்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா முறியடிக்கலாம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
பிரையன் லாராவின் 400* சாதனையை ரோஹித் சர்மா முறியடிக்கலாம்: டேவிட் வார்னர்


டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை (400 ரன்கள்) எடுத்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா முறியடிக்கலாம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முச்சதம் அடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 335 ரன்கள் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார். 

ஆனால், சற்று தாமதமாக டிக்ளேர் செய்திருந்தால் டேவிட் வார்னர், பிரையன் லாரா ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் எடுத்த உலக சாதனையை முறியடித்திருக்கலாம் என ரசிகர்கள் டிவிட்டரில் விமரிசித்தனர்.

இதையடுத்து, டேவிட் வார்னர் தனது முச்சதம் குறித்தும் சேவாக் அளித்த ஊக்கம் குறித்தும் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசினார். அப்போது லாராவின் சாதனையை முறியடிப்பது குறித்து தெரிவிக்கையில், 

"அது ஒவ்வொரு நபரையும் பொறுத்தே உள்ளது. இங்கு பவுண்டரிகள் மிகவும் நீளமாக இருக்கும். பந்தை பவுண்டரிக்கு விரட்டுவது கடினமான ஒன்றாகும். சோர்வடைந்துவிட்டால் அதை முயற்சிப்பது மிகவும் கடினமாகிவிடும். அதனால், நான் இரண்டு ரன்களை ஓடி எடுக்க முயற்சிப்பேன். காரணம், என்னால் பவுண்டரிகள் அடிக்க முடியும் என்று எனக்கு தோன்றாது.

என்றேனும் ஒரு நாள் இந்த சாதனையை முறியடிக்கும் வீரர் ஒருவரின் பெயரைக் குறிப்பிடச் சொன்னால் நிச்சயம் அது ரோஹித் சர்மாவாகதான் இருக்க முடியும்" என்றார்.

இதையடுத்து, இந்தியாவின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் குறித்து பேசுகையில்,

"ஐபிஎல் கிரிக்கெட்டில் தில்லி அணிக்காக விளையாடும்போது விரேந்திர சேவாக்கைச் சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர், 'டி20 ஆட்டத்தைக் காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரராக திகழ்வாய்' என்று கூறினார். அதற்கு நான் 'நீங்கள் சரியான மனநிலையில் இல்லை. நான் நிறைய முதல்தர கிரிக்கெட் ஆட்டங்கள் விளையாடியதில்லை' என்றேன். அவர் எப்போதும் கூறுவார் 

'ஸ்லிப் மற்றும் கல்லி பகுதிகளில் ஃபீல்டர்கள் இருப்பார்கள். கவர் திசையில் ஃபீல்டர்கள் இருக்கமாட்டார்கள். அதனால், நீ அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கி நாள் முழுவதும் களத்தில் நின்று விளையாடலாம் ' என்றார்" என வார்னர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com