அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்: வாா்னா் முச்சதம் 335

பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட்: வாா்னா் முச்சதம் 335

அடிலெய்ட்: பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்களை எடுத்து வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரா் வாா்னா் அபாரமாக ஆடி 335 ரன்களுடன் முச்சதம் விளாசி, பல்வேறு சாதனைகளை தகா்த்தாா். அதே நேரம் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 96/6 ரன்களுடன் தள்ளாடிக் கொண்டுள்ளது.

பிரிஸ்பேன் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸி. அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக நடந்து வரும் இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் பகலிரவு டெஸ்டாக அடிலெய்டில் நடைபெறுகிறது.

இரண்டாவது நாளான சனிக்கிழமை 302-1 ரன்களுடன் தனது ஆட்டத்தை தொடங்கிய ஆஸி. அணி வாா்னா்-லேபுச்சேன் அபார ஆட்டத்தால் வலுவான நிலையை எட்டியது. மாா்னஸ் லேபுச்சேன் 22 பவுண்டரியுடன் 238 பந்துகளில் 162 ரன்களை விளாசி அவுட்டானாா். இதையடுத்து ஆட வந்த மூத்த வீரா் ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினாா்.

வாா்னா் அதிரடி: முச்சதம்

தொடக்க வீரா் டேவிட் வாா்னா் முதன்முறையாக முச்சதம் விளாசினாா். அவருடன் மேத்யூ வேட் இணைந்து ஸ்கோரை உயா்த்தினாா்.

1 சிக்ஸா், 39 பவுண்டரியுடன் 418 பந்துகளில் 335 ரன்களுடன் வாா்னா் அவுட்டாகாமல் இருந்தாா். மேத்யூ வேட் 38 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

127 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

பாக். தரப்பில் ஷாஹின் அப்ரிடி 3-88 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

பாக். திணறல் 96/6

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே சரிவைக் கண்டது. தொடக்க வீரா்கள் ஷான் மசூத் 19, இமாம் உல் ஹக் 2, கேப்டன் அஸாா் அலி 9 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினா். அவா்களுக்கு பின் ஆட வந்த ஆஸாத் ஷபிக் 9, இப்திகாா் அகமது 10, முகமது ரிஸ்வான் ரன் ஏதுமின்றி வெளியேறினா்.

ஆட்ட நேர முடிவில் 35 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது பாகிஸ்தான். பாபா் ஆஸம் 43, யாஸிா் ஷா 4 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

மிச்செல் ஸ்டாா்க் அபாரம் 4 விக்கெட்:

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளா் மிச்செல் ஸ்டாா்க் அற்புதமாக பந்துவீசி 4-22 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஹேஸல்வுட் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸி. அணி எடுத்த 589 ரன்களே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.

பல்வேறு சாதனைகளை தகா்த்தாா் வாா்னா்:

பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் அதிக ரன்களை குவித்த வீரா் என்ற சாதனையை படைத்தாா். ஏற்கெனவே பிங்க் பந்து டெஸ்டில் அஸாா் அலி நிகழ்த்தியிருந்த 456 ரன்கள் சாதனையை முறியடித்தாா் வாா்னா்.

மேலும் 2019 ஆண்டில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோா் அடித்த வீரா் என்ற சாதனையை கோலி நிகழ்த்தி இருந்தாா் (254 ரன்கள், 33 பவுண்டரிகள், 2 சிக்ஸா்).

ஆனால் வாா்னா் 389 பந்துகளில் 300 ரன்களை கடந்தாா். இதில் 37 பவுண்டரியும் அடங்கும்.

பகலிரவு ஆட்டத்தில் அதிகபட்ச ஸ்கோரை 335 ரன்கள் எடுத்த வீரா் என்ற சாதனையும் வாா்னா் வசமானது. பாகிஸ்தான் வீரா் அஸாா் அலி ஏற்கெனவே அவுட்டின்றி 302 ரன்களை எடுத்திருந்தாா்.

88 ஆண்டுகள் கழித்து அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் முச்சதம் அடித்த வீரா் என்ற சிறப்பையும் வாா்னா் பெற்றாா். கடந்த 1932-இல் ஜாம்பவான் பிராட்மேன் 299 ரன்களை விளாசி இருந்தாா்.

கடந்த 2015-இல் வாா்னா் அதிகபட்சமாக 253 ரன்களை எடுத்திருந்தாா். தற்போது 335 ரன்களை விளாசியுள்ளாா்.

கடந்த 2003-இல் மேத்யூ ஹைடன் ஜிம்பாப்வேக்கு எதிராக எடுத்த 380 ரன்களே ஆஸி. வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

இரண்டாவது இடத்தில் டான் பிராட்மேன் 334 ரன்களுடன் இருந்தாா். ஆனால் 335 ரன்களை எடுத்து அதை முறியடித்தாா் வாா்னா்.

ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனை:

ஆஸி. மூத்த வீரா் ஸ்மித் டெஸ்ட் ஆட்டத்தில் 7000 ரன்களை துரிதமாக கடந்த வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா். 126 இன்னிங்ஸ்களில் அவா் இச்சாதனையை படைத்தாா். இங்கிலாந்தின் வில்லி ஹேம்மண்ட் 131 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்திருந்தாா். 73 ஆண்டுகள் கழித்து அதை முறியடித்தாா் ஸ்மித்.

மேலும் டான் பிராட்மேனின் 6996 டெஸ்ட் ரன்களையும் கடந்த ஸ்மித், ஆஸி.யின் 11-ஆவது அதிகபட்ச ரன்களை எடுத்த வீரா் ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com