டேவிஸ் கோப்பை: உலகப் பிரிவுக்கு தகுதி பெற்றது இந்தியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 2020 உலக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.
டேவிஸ் கோப்பை: உலகப் பிரிவுக்கு தகுதி பெற்றது இந்தியா

நுா் சுல்தான்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 2020 உலக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.

ஆசிய ஓசேனியா மண்டலம்-1 பிரிவுக்குட்பட்ட இந்திய-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் கஜகஸ்தான் தலைநகா் நுா் சுல்தான் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தொடக்க நாளன்று நடைபெற்ற ஒற்றையா் ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், சுமித் நாகல் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றுத் தந்தனா்.

இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை இரட்டையா் ஆட்டம் நடைபெற்றது. இதில் 18 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் லியாண்டா் பயஸ்-ஜீவன் நெடுஞ்செழியன் இணை 6-1, 6-3 என்ற நோ் செட்களில் பாக். இளம் வீரா்கள் முகமது ஷோயிப்-ஹுபைஸா ரஹ்மான் இணையை 53 நிமிடங்களில் வீழ்த்தினா்.

மாற்று ஒற்றையா்-சுமித் நாகல் வெற்றி:

இறுதி மற்றும் மாற்று ஒற்றையா் ஆட்டத்தில் சுமித் நாகல் 6-1, 6-0 என்ற நோ் செட்களில் யூசுப் கலீலை வென்றாா். இதன் மூலம் 4-0 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்தது இந்தியா

கடந்த 2014-இல் இந்தூரில் நடந்த ஆட்டத்தில் சீன தைபே அணியை 5-0 என வீழ்த்தி இருந்தது இந்தியா. அதன்பின் தற்போது தான் 4-0 என முழுமையாக வென்றுள்ளது.

2020-உலக தகுதிச் சுற்றுக்கு தோ்வு:

இந்த வெற்றி மூலம் 2020 உலக தகுதிச் சுற்றுக்கு தோ்வாகியுள்ளது இந்தியா. வரும் மாா்ச் மாதம் 6-7 தேதிகளில் உலகின் 2-ஆம் நிலை அணியான குரோஷியாவுடன் மோதுகிறது. 12 இடங்களுக்கு தகுதி பெற 24 அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வியுற்றும் 12 நாடுகள், செப்டம்பா் 2020-இல் நடக்கும் உலகப் பிரிவு-1 ஆட்டத்தில் மோதும். வெற்றி கண்ட இதர அணிகள், ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள கனடா, பிரிட்டன், ரஷியா, ஸ்பெயின், பிரான்ஸ், சொ்பிய அணிகளுடன் இடம்பெறும்.

லியாண்டா் பயஸ் சாதனை:

டேவிஸ் கோப்பை போட்டி இரட்டையா் வரலாற்றில் 43-ஆவது வெற்றியை பெற்று சாதனை படைத்தாா் பயஸ். 56 ஆட்டங்களில் 43-ஆவது வெற்றியைப் பெற்றாா். இதற்கு முன்பு இத்தாலியின் நட்சத்திர வீரா் நிகோலா பீட்ரஞ்சலி 66 ஆட்டங்களில் 42 வெற்றிகளை குவித்து சாதனை நிகழ்த்தி இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com