ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக 14 டெஸ்டுகளில் தோற்றுள்ள பாகிஸ்தான் அணி!

அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி கண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி....
ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக 14 டெஸ்டுகளில் தோற்றுள்ள பாகிஸ்தான் அணி!

அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி கண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி. இதன்மூலம் அந்த அணி 2-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றுள்ளது. 

2-வது டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 127 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தார் ஆஸி. கேப்டன் டிம் பெயின். வார்னர் 335, வேட் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். வார்னர், லாராவின் சாதனையான 400 ரன்களைத் தாண்டுவார் என ரசிகர்கள் விருப்பப்பட்டார்கள். எனினும் அணியின் நலனை முன்னிறுத்தி டிக்ளேர் செய்தார் ஆஸி. கேப்டன். 

பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில், 94.4 ஓவர்களில் 302 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபர் அஸாம் 97 ரன்களும் யாசிர் ஷா 113 ரன்களும் எடுத்தார்கள். ஒரு கட்டத்தில் 194 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், பின்வரிசை வீரர்களின் பங்ளிப்பினால் 302 ரன்கள் எடுத்தது. ஆஸி. அணி தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

ஃபாலோ ஆன பாகிஸ்தானை மீண்டும் பேட்டிங் செய்யச் சொன்னார் ஆஸி. கேப்டன். பந்துவீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் 95 ஓவர்கள் வீசியும் அவர் இந்த முடிவை எடுத்தது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. ஆனால் மழை காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கருதப்பட்டது. 2-வது இன்னிங்ஸிலும் பேட்ஸ்மேன்கள் பொறுப்பின்றி விளையாடியதால், 82 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாகிஸ்தான் அணி. இதனால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் அணியில் 2-வது இன்னிங்ஸில் ஷான் மசூத் 68 ரன்களும் அசாத் ஷஃபிக் 57 ரன்களும் எடுத்தார்கள். ஆஸி. அணித் தரப்பில் லயன் 5 விக்கெட்டுகளும் ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இந்த ஆட்டத்தில் முச்சதம் அடித்த டேவிட் வார்னர், ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளை வென்றார். 

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டை இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. 2-வது டெஸ்டை, இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன்மூலம் 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. 

இதன்மூலம் 1999-ல் ஆரம்பித்து ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய 14 டெஸ்டுகளிலும் தொடர்ச்சியாகத் தோற்றுள்ளது பாகிஸ்தான் அணி. வேறெந்த அணியும் மற்றொரு நாட்டில் இத்தனை டெஸ்ட் தோல்விகளைத் தொடர்ச்சியாகக் கண்டதில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com