ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: சூப்பர் ஃபார்மில் உள்ள 19 வயது வீரர்!

தேவ்தத் படிக்கல் என்கிற இளம் வீரரைக் கடந்த வருடம் ரூ. 10 லட்சத்துக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி.
ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: சூப்பர் ஃபார்மில் உள்ள 19 வயது வீரர்!

ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை இதுவரை வெல்லமுடியவில்லை. கடந்த வருடம் 6-ம் இடம், 2017-லிலும் இந்த வருடமும் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 

அடுத்த வருட ஐபிஎல் போட்டியையாவது வெல்வோமா என்கிற ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார் ஓர் இளம் வீரர். 

தேவ்தத் படிக்கல் என்கிற இளம் வீரரைக் கடந்த வருடம் ரூ. 10 லட்சத்துக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. அந்த 19 வயது வீரர் தான் தற்போது இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் நெ.1 வீரராக உள்ளார். இது போதாதா ஆர்சிபி ரசிகர்கள் புதிதாக உற்சாகம் கொள்ள!

சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி மற்றும் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டி என இரண்டிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் தேவ்தத் படிக்கல். 

தேவ்தத் படிக்கல் : 2019 சீஸன்

விஜய் ஹசாரே: 11 ஆட்டங்கள், 609 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 80.09, 5 அரை சதங்கள் & 2 சதங்கள்

சையத் முஷ்டாக் அலி: 11 ஆட்டங்கள், 548 ரன்கள், ஸ்டிரைக் ரேட் - 178.50, 5 அரை சதங்கள், 1 சதம். 

*

கர்நாடக அணியில் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, கருண் நாயர் என பிரபல வீரர்கள் இருந்தபோதும் அனைவரையும் தாண்டி இரு போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்துச் சாதித்துள்ளார் தேவ்தத். இந்த வருட சீஸனில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார். 

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம்பெற்றாலும் தேவ்தத் ஓர் ஆட்டத்திலும் விளையாடவில்லை. ஆனால் இந்த வருடம் அவருடைய ஆட்டத்தைக் காண ஆர்சிபி ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். ஆர்சிபி அணியின் தலையெழுத்தை இவர் தான் மாற்றவுள்ளார் என்று இப்போதே பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். நம்பிக்கையை வீணாக்காத திறமை என்பதால் அது உண்மையாகவும் வாய்ப்புண்டு. 

இதுமட்டுமில்லாமல் தேவ்தத்துக்கு மேலும் இரு முக்கிய சவால்கள் உள்ளன. 50, 20 ஓவர்கள் போட்டிகளில் சாதித்தது போல ரஞ்சிப் போட்டியிலும் சாதிக்கவேண்டும். அடுத்ததாக, அடுத்த வருடத்தில் இந்திய ஏ அணி, நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. அந்த அணிக்குத் தேர்வாகவேண்டும். 

ஆர்சிபி ரசிகர்களிடம் கேட்டால், தேவ்தத் படிக்கல், ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணிக்குப் பெற்றுத் தர வேண்டும் என்றுதான் சொல்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com