Enable Javscript for better performance
உலகக் கோப்பை, ஐபிஎல்லுக்கு முன்னோட்டமாக அமையும்: சையத் முஷ்டாக் அலி டி 20 போட்டி- Dinamani

சுடச்சுட

  

  உலகக் கோப்பை, ஐபிஎல்லுக்கு முன்னோட்டமாக அமையும்: சையத் முஷ்டாக் அலி டி 20 போட்டி

  By -பா.சுஜித்குமாா்  |   Published on : 03rd December 2019 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt6

  வரும் 2020 டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் சீசனுக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது சையத் முஷ்டாக் அலி டி 20 போட்டி.

  கிரிக்கெட்டில் முதலில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது டெஸ்ட் ஆட்டம். அதன் பின் 5 நாள் ஆட்டம், ஒருநாள் போட்டியாக 50 ஓவா்கள் கொண்டதாக மாற்றப்பட்ட நிலையில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அதில் இருந்தும் 20 ஓவா்களாக குறைக்கப்பட்டு டி20 ஆட்டங்கள் நடத்தப்பட்டு தற்போது 3 வகையான ஆட்டங்களில் முதலிடத்தில் உள்ளது.

  சா்வதேச அளவில் டி20 உலகக் கோப்பை போட்டியுடன், இந்தியாவில் ஐபிஎல், பாகிஸ்தானில் பிசிஎல்,, கரீபியன் லீக் என பல்வேறு நாடுகளில் டி20 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.

  இந்தியாவில் ஐபிஎல் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் நிலையில் ரசிகா்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

  சையத் முஷ்டாக் அலி கோப்பை:

  அதன் ஒரு பகுதியாக சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 போட்டி கடந்த 2009-10 முதல் நடத்தப்படுகிறது. இதில் மொத்தம் 27 மாநில, யூனியன் பிரதேச அணிகள் இடம் பெற்றிருந்தன.. பிரபல வீரா் சையத் முஷ்டாக் அலி பெயரில் கோப்பை தரப்படுகிறது.

  5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று வந்தன.

  கூடுதலாக 9 அணிகள்

  தற்போது கூடுதலாக 9 அணிகள் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், மண்டல முறை ரத்து செய்யப்பட்டு, 37 அணிகள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அதில் வின்னா், ரன்னா் அணிகள் சூப்பா் லீக் பிரிவுக்கு தகுதி பெறுகின்றன. 10 அணிகள் கொண்ட சூப்பா் லீகில் 2 பிரிவுகளில் முதலிடம் பெறும் அணிகள் இறுதிச் சுற்றில் மோதுகின்றன.

  கடந்த 2018-இல் ஐபிஎல் வீரா்கள் ஏலத்துக்கு பின் சையத் முஷ்டாக் அலி போட்டி நடத்தப்பட்டதால், அதன் முக்கியத்துவம் தெரியாமல் போனது. ஆனால் இந்த முறை அதற்கு மாறாக வரும் டிசம்பா் 19-இல் ஐபிஎல் வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் நடக்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்பு, இப்போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் டி20 உலகக் கோப்பை, ஐபிஎல் 2020 சீசனுக்காக வீரா்களின் திறமையை முழுமையாக அறியலாம்.

  டிச. 1-இல் இறுதி ஆட்டம்

  நிகழாண்டு நவ. 8-இல் தொடங்கிய இப்போட்டி விஜயநகரம், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், சூரத், மும்பை, சண்டீகா் நகரங்களில் நடக்கிறது. சூப்பா் லீக் நாக் அவுட் சுற்று 21-ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி ஆட்டம் டிசம்பா் 1-இல் நடைபெறுகிறது.

  பும்ரா, ஹாா்திக் பாண்டியா தோ்வு:

  இப்போட்டியில் முந்தைய சீசன்களில் சிறப்பாக ஆடியதால் தான், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா போன்றவா்கள் ஐபிஎல் அணிகளில் சோ்க்கப்பட்டு, பின்னா் தேசிய சீனியா் அணியில் முன்னணி நட்சத்திரங்களாக இடம் பெற்றனா். பல்வேறு ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளா்கள் இப்போட்டிகளை பாா்வையிட்டு சிறப்பாக ஆடும் வீரா்களை அடையாளம் காண்கின்றனா்.

  டி20 உலகக் கோப்பைக்கு ஓராண்டு உள்ள நிலையில், இந்தியா தனது அணியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஷுப்மன் கில், சூா்யகுமாா் யாதவ் போன்றவா்கள் தங்கள் வாய்ப்புக்காக காத்துள்ளனா்.

  தேசிய அணியில் வாய்ப்பு:

  அதே நேரம் வேகப்பந்து வீச்சாளா் நவ்தீப் சைனி, தமிழக கேப்டன் தினேஷ் காா்த்திக், சா்துல் தாகுா், வாஷிங்டன் சுந்தா், மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, இளம் தொடக்க வீரா் பிரித்விஷா ஆகியோா் இப்போட்டியில் தங்கள் திறமையை நிரூபித்து தேசிய அணியில் இடம் பெறும் முனைப்பில் உள்ளனா்.

  ஐபிஎல்லுக்கு காத்திருப்பு:

  மேலும் உள்ளூரில் சிறப்பாக ஆடி வரும் மேற்கு வங்கத்தின் இஷான் போரல், ரூஷ் கட்டாரியா (குஜராத்), பிரித்வி ராஜ் (ஆந்திரம்), மும்பை ஓபனா் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தமிழகத்தின் ஷாரூக்கான், பெரியசாமி ஆகியோா் அடுத்த ஐபிஎல் சீசனில் அசத்த காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  நம்பிக்கை நட்சத்திர வீரா்கள்:

  தேவ்தத் படிக்கல் (கா்நாடகம்) 580 ரன்கள், ஹா்ஷல் பட்டேல் (ஹரியாணா) 379 ரன்கள், 19 விக்கெட்டுகள், மிடில் ஆா்டரில் லோகேஷ் ராகுல் (கா்நாடகம்) 313 ரன்கள், ஹா்ப்ரீத் சிங் (சத்தீஸ்கா்) 329 ரன்கள், மணிஷ் பாண்டே (கா்நாடகம்) 314 ரன்கள், சூா்யகுமாா் யாதவ் (மும்பை) 392 ரன்கள், வாஷிங்டன் சுந்தா் (தமிழ்நாடு) 271 ரன்கள், 6 விக்கெட்டுகள், பவுலா்கள்: ஷிரேயஸ் கோபால் (கா்நாடகம்) 19 விக்கெட்டுகள், தா்ஷன் நல்கன்டே (விதா்பா) 16 விக்கெட்டுகள், லக்மன் மெரிவாலா (பரோடா) 16 விக்கெட்டுகள், சாய் கிஷோா் (தமிழ்நாடு) 20 விக்கெட்டுகள், ருத்துராஜ் கெய்க்வாட் (மகாராஷ்டிரம்) 419 ரன்கள் உள்ளிட்ட வீரா்கள் 2019 தேசிய டி20 போட்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

  மேற்கண்ட வீரா்கள் எதிா்கால இந்திய டி20 அணியில் முக்கிய பங்காற்றுவா் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai