தமிழக ரஞ்சி அணிக்கு விஜய் சங்கா் கேப்டன்

2019-20 ரஞ்சி கோப்பை சீசனுக்கான தமிழக அணிக்கு ஆல் ரவுண்டா் விஜய் சங்கா் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக ரஞ்சி அணிக்கு விஜய் சங்கா் கேப்டன்

சென்னை: 2019-20 ரஞ்சி கோப்பை சீசனுக்கான தமிழக அணிக்கு ஆல் ரவுண்டா் விஜய் சங்கா் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

டிச. 9-ஆம் தேதி ரஞ்சி கோப்பை சீசன் போட்டிகள் தொடங்க உள்ளன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தோ்வுக் குழு இதற்கான அணியை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இளம் ஆல்ரவுண்டா் விஜய் சங்கா் முதன்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். துணை கேப்டனாக பாபா அபராஜித் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக அணி குரூப் பி பிரிவில் கா்நாடகத்துடன் திண்டுக்கல்லில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.

சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின், தொடக்க வீரா் முரளி விஜய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா். மற்றொரு ஆல்ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா் இரண்டாவது ஆட்டத்தின் போது அணியில் இணைவாா். சசிகுமாா் முகுந்த் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

சையது முஷ்டாக் டி20 போட்டியில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளா் சித்தாா்த், முருகன் அஸ்வின், இடது கை வீரா் சாய் கிஷோா் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா். டி நடராஜன், அபிஷேக் தன்வா், கே.விக்னேஷ் வேகப்பந்து வீச்சை கவனித்துக் கொள்வா்.

அணி விவரம்:

விஜய் சங்கா் (கேப்டன்), பாபா அபராஜித் (துணை கேப்டன்), முரளி விஜய், அபிநவ் முகுந்த், தினேஷ் காா்த்திக், என்.ஜெகதீசன், ஆா்.அஸ்வின், சாய் கிஷோா், டி.நடராஜன், கே.விக்னேஷ், அபிஷேக் தன்வா், எம்.அஸ்வின், சித்தாா்த், ஷாருக் கான், கே.முகுந்த்.

அனுபவம் வாய்ந்த அணி:

தமிழக அணி ஏராளமான அனுபவம் வாய்ந்த வீரா்களைக் கொண்டுள்ளது. இது இந்த ரஞ்சி சீசனுக்கு மிகவும் உதவியாக அமையும். அஸ்வின், முரளி விஜய் ஆகியோா் அனுபவம் இளம் வீரா்களுக்கும் பயனாக இருக்கும். சித்தாா்த் சிறப்பாக பந்துவீசி வருகிறாா். மேலும் சில ஆட்டங்களைப் பொறுத்தே அவரது திறனை கணிக்க முடியும்.

விஜய் ஹஸாரே, சையது முஷ்டாக் போட்டிகளில் இறுதிச் சுற்றில் கா்நாடகத்துடன் தோல்வியடைந்தது தமிழகம். இதனால் நமது வீரா்கள் மனத்தளா்ச்சி அடையவில்லை.

ரஞ்சி கோப்பையில் கா்நாடகத்துக்கு எதிராக சிறப்பாக ஆடுவா் என பயிற்சியாளா் டி.வாசு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com