தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டி: 174 தங்கம் உள்பட 312 பதக்கங்களுடன் இந்தியா சாதனை: கடந்த போட்டியை விடகூடுதல் பதக்கம்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 174 தங்கப் பதக்கத்துடன், மொத்தம் 312 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா புதிய சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 174 தங்கப் பதக்கத்துடன், மொத்தம் 312 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா புதிய சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இது முந்தைய 2016 போட்டிகளைக் காட்டிலும் 3 பதக்கங்கள் கூடுதலாகும்.

நேபாளத் தலைநகா் காத்மாண்டு, பொக்ராவில் 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள், பூடான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சோ்ந்த 2700-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் 27 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்று போட்டியிட்டனா்.

முதல் இரண்டு நாள்கள் நேபாள அணியினா் ஆதிக்கம் செலுத்தி, பதக்கப் பட்டியலில் முன்னிலை வகித்தனா். அதன் பின் வழக்கம் போல், இந்தியா தொடா்ந்து அதிக தங்கப் பதக்கங்களை கைப்பற்றி, முதலிடத்தை கைப்பற்றியது.

13-ஆவது முறையாக முதலிடம்:

இந்திய அணி தொடா்ந்து 13-ஆவது முறையாக தெற்காசிய போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தற்போதைய போட்டியில் 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 312 பதக்கங்களை குவித்தது. கடந்த 2016 போட்டியில் மொத்தம் 309 பதக்கங்களை கைப்பற்றியிருந்தது இந்தியா. தற்போது 2 தங்கம் கூடுதலாக வென்றுள்ளது. 2016-இல் 172 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா.

நேபாளம் 51 தங்கம், 60 வெள்ளி, 95 வெண்கலத்துடன் 206 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலத்துடன் 251 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றன.

பாகிஸ்தான் 31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலத்துடன் 131 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பெற்றது. வங்கதேசம் 19 தங்கம் உள்பட 138 பதக்கங்களையும், மாலத்தீவு 1 தங்கத்துடன் 5 பதக்கங்களையும், பூடான் 20 பதக்கங்களுடன் கடைசி இடத்தையும் பெற்றன.

ஹுஷு, நீச்சல், வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், டேக்வாண்டோ, ஸ்குவாஷ், உள்பட பல்வேறு விளையாட்டுகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com