டி20: தொடரை கைப்பற்றியது இந்தியா

மே.இ.தீவுகள் அணிக்கு  எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி.
டி20: தொடரை கைப்பற்றியது இந்தியா

மே.இ.தீவுகள் அணிக்கு  எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது இந்திய அணி. மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 ஆட்டத்தில் ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
முதலில் ஆடிய இந்திய அணி 240/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 173/8 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா 1 ஆட்டத்தில் வென்றுள்ளன. தொடரை கைப்பற்றப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது.

டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய தரப்பில் ரோஹித் சர்மா-லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். .

ரோஹித்-ராகுல் விஸ்வரூபம்: ரோஹித் சர்மா-ராகுல் அதிரடி ஆட்டத்தால் 10 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 116 ரன்களைக் கடந்தது.
துணை கேப்டன் ரோஹித் தனது 19-ஆவது டி20 அரைசத்தை பதிவு செய்தார்.   ராகுலும் இத் தொடரில் தனது 2-ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். 

ரோஹித் சர்மா 71:
5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 71 ரன்களை விளாசி கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் ஹெய்டனிடம் கேட்ச்தந்து வெளியேறினார் ரோஹித்.

ரிஷப் பந்த் டக் அவுட்:
ரிஷப் பந்த் வழக்கம் போல் சொதப்பலாக ஆடி, பொல்லார்ட் பந்தில் டக் அவுட்டானார். பின்னர் ராகுலுடன் இணைந்து கேப்டன் கோலி ரன்களை உயர்த்தினார். 24 பந்துகளில் விராட் கோலி தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

ராகுல் 91: 4 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 91 ரன்களை விளாசிய ராகுல், காட்ரெல் பந்துவீச்சில் பூரனிடம் கேட்ச்தந்து பெவிலியன் திரும்பினார். 9 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டார் அவர்.
விராட் கோலி சிக்ஸர், பவுண்டரி மழை:  கேப்டன் விராட் கோலி 7 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 29 பந்துகளில் 70 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் நின்றார்.

20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது இந்தியா.
மே.இ.தீவுகள் தரப்பில் காட்ரெல், வில்லியம்ஸ், பொல்லார்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 241 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகளுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. பிராண்டன் கிங் 5 ரன்களுடன் புவனேஷ்வர் பந்துவீச்சில் அவுட்டானார். இரண்டாவது ஆட்டத்தில் அபாரமாக ஆடிய லென்டில் சிம்மன்ஸ் 7 ரன்களுடன் ஷமி பந்துவீச்சில் வெளியேறினார். 

விக்கெட் வீழ்ச்சி: இதைத் தொடர்ந்து ஆட வந்த இளம் வீரர் நிக்கோலஸ் பூரனும், தீபக் சாஹர் பந்துவீச்சில் கோல்டன் டக் அவுட்டானார். 
மறுமுனையில் ஒரளவு நிலைத்து ரன்களை அடிக்க முயன்ற ஷிம்ரன் ஹெட்மயர் 5 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 41 ரன்களை விளாசி குல்தீப் யாதவ் பந்தில் பெவிலியன் திரும்பினார். ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டரும் வெறும் 8 ரன்களுக்கு குல்தீப்பால் வெளியேற்றப்பட்டார்.

பொல்லார்ட் அபாரம் 68 ரன்கள்: மறுமுனையில் அபாரமாக ஆடி வந்த கேப்டன் பொல்லார்ட் 6 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 39 பந்துகளில் 68 ரன்களை சேர்த்து, புவனேஷ்வர் பந்துவீச்சில் அவுட்டானார்.  அவருக்கு பின் 7 ரன்களுக்கு ஹெய்டனை போல்டாக்கினார் ஷமி. சாஹர் பந்தில் 6 ரன்களுடன் கேரி பியரி வெளியேறினார். கேஸ்ரிக் வில்லியம்ஸ் 13 ரன்களுடனும், காட்ரெல் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 173/8 ரன்களை எடுத்து தோல்வியுற்ற மே.இ.தீவுகள் தொடரையும் 1-2 என இந்தியாவிடம் இழந்தது.

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4-25, ஷமி 2-25, புவனேஷ்வர் குமார் 2-41 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

400 சிக்ஸர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா
சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்தார் ரோஹித் சர்மா. பல்வேறு சாதனைகளுக்கு உரியவரான ரோஹித், மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 ஆட்டத்தின் 3-ஆவது ஓவரை காட்ரெல் வீசிய போது, லாங் ஆனில் பிரம்மாண்டமான சிக்ஸரை விளாசினார். இது அவரது 400-ஆவது சிக்ஸராக அமைந்தது. 
இதற்கு முன்னதாக கிறிஸ் கெயில் 534, ஷாகித் அப்ரிடி 476 சிக்ஸர்களை விளாசி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com